Friday, December 5, 2014

நிதித் திட்டமிடலும் குடும்பமும் 2

முந்தைய கட்டுரையில் சொன்னபடி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் நிதிசார்ந்த முடிவுகளை நடைமுறைப்  படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். அதற்கு முதல் அடிப்படை நிதித் தரவுகள். அதாவது குடும்பத்தின் வரவு செலவு பற்றிய தகவல்கள். எடுத்துக்காட்டாக, வருமானம் என்றால் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள். சம்பளக்காரர்களுக்கு வருமானத் தகவல் வெளிப்படை. தொழில்முனைவோருக்கு அது அவ்வளவு தெளிவானதல்ல. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதனால் நிதி மேலாண்மை இரு வகையினருக்கும் ஒரே போன்றதல்ல. இந்தக் கட்டுரையில் மாதச் சம்பளக்காரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வருமானம்
பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஒரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது. அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டமிடலுக்கு இது தான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடலுக்கு ஊக்கத்தொகையைக் (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.

செலவு
இதில் தான் பலருக்கும் பிரச்சினை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கே தான். எங்கள் அனுபவத்தில், கணவன் மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவியானவள் குடும்பத்திற்கு வழங்கும் உழைப்பின் நிமித்தம் தன்னால் 'நன்கு கவனிக்கப்பட' வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது. இதில் கணவனுடைய 'பெருந்தன்மை' ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய 'பெருந்தன்மைக்கு' வேலையில்லை. 

செலவுகளை மூன்றாகப்  பிரிக்கலாம்.
  1. வாழ்வுச்செலவு
  2. தொழிற் செலவு
  3. விருப்பச் செலவு
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு. இதில் மருத்துவச் செலவு என்பது வழக்கமான, காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கான சிறு செலவுகளையே குறிப்பிடுகிறது. தொழில் செலவு என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கும் உண்டு. அதாவது, வேலை நிமித்தம் அவர்கள் செய்ய வேண்டியவை (நிறுவனத்தால் திரும்பக் கொடுக்கப்படாத செலவுகள்). இதில் போக்குவரத்து, சாப்பாடு, சக பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளும் செலவுகள் போன்றவை அடங்கும். மேற்கண்ட இரண்டும் அடிப்படைச்செலவுகள் எனலாம். மூன்றாவதான விருப்பச் செலவு (பொழுதுபோக்குச் செலவு, தனித்த விருப்பங்களுக்கான செலவு, தானம் போன்றவை) என்பது அடிப்படையானதல்ல. ஆனால் நிதிமேலாண்மையில் பெரும் பாதிப்பைச் செலுத்துவது அதுதான். ஏனென்றால், வாழ்வு மற்றும் தொழிற் செலவுகளில் பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை. ஆனால் விருப்பச் செலவுகள் ஒருவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செல்போனை (விலை ரூ.30000 என்று வைத்துக் கொள்வோம்) மாற்றும் ஒருவர் தான் மாதந்தோறும் ரூ.1250 செல்போனுக்காக செலவு செய்வதாக உணர்வதில்லை. அவரையே ஓய்வூதியத்திற்கென கூடுதலாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கச் சொன்னால் இல்லையென்பார். அதனால், ஒரு குடும்பம் தனது எதிர்காலத் திட்டங்களுக்கு  பணம் ஒதுக்கிய பின்பே விருப்பச் செலவுகளைச் செய்யவேண்டும். ஏனென்றால் விருப்பச் செலவுகளின் உடனடி நுகர்வின்பம் (அறுபது வயதில் கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியத்தை விட இன்றைய ஐபோன் 6 அதிகக் கவர்ச்சியானது) அளிக்கும் தூண்டுதல் அப்படி. அது மனித மனத்தின் பொதுவான பலவீனம். உண்மையில் ஒரு குடும்பத்தின் நிதித் திட்டமிடலுக்கான தேவை என்பது இந்த தனி மனித பலவீனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவே.

ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதை எப்படித் திட்டமிடுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Tuesday, November 18, 2014

நிதித்திட்டமிடலும் குடும்பமும்

நெருங்கிய உறவினர் ஒருவர் தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டதைப் போல வேறு யாரையும் நான் கண்டதில்லை. அரசூழியரான அவர் தனது ஓய்வுக் காலம் வரையிலும் தனது மனைவியை எங்கேயும் தனியே அனுப்பியதில்லை. அவருக்கு கால் வலியும் இருந்தது. அதன் காரணமாக அவர் மனைவியைச் சிறு வேலையைக் கூட செய்யவிடமாட்டார். இவரின் பணிவிடையிலேயே அவர் பெரும்பாலும் இருந்தார். வீடு, டிவி வேறொன்றுமில்லை. நல்ல உடல்நலத்துடன் எப்பொதும் சுறுசுறுப்பகக் காணப்படும் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிகிச்சையெடுத்துக்கொண்ட ஒரே வருடத்தில் இறந்தார். இப்போது அவரது மனைவி தனது பெருமளவு வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிறார். தண்ணீர்க்குடம் தூக்கி வைப்பது முதற்கொண்டு பல வேலைகளையும் தானே செய்கிறார். தனது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் அவர் மீதமுள்ள காலத்தைத் தனியே கடக்க வேண்டும். ஆனால் குடும்பத்தின் நிதி சார்ந்த விசயங்கள் அனைத்தையும் தனது மனைவியிடம் பகிர்ந்ததனால் அவருக்கு இப்போது பணப்பிரச்சினை ஏதுமில்லை. இத்தனைக்கும் அவர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.

ங்களது அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளர்களிடம் இரண்டு விசயங்களை அவதானித்து வருகிறோம்.
1.   கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது.
2.   கணவன் மட்டும் வேலைக்குப் போகும் வீடுகளில் பெண்கள் குடும்ப நிதிச் சூழல் பற்றி ஒரு தோராயமான கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். இத்தனைக்கும் இவர்களில் பலர் நன்கு படித்தவர்கள் (எம்பிஏ க்களும் அடக்கம்).
மேலே சொன்ன அவதானிப்பில் குடும்ப நிதி மேலாண்மை என்று எதைச் சொல்கிறேன் என்பதை விளக்கினால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு குடும்பம் என்பது பொருளாதாரச் சமூகத்தில் ஒரு சிறிய நிதியமைப்பு. ஒரு அமைப்பின் நிதி நலனில் அதன் உறுப்பினர் அனைவருக்கும் சமமான அக்கறை இருக்க வேண்டும். அதாவது ஒரு தனி நபர் (அவர் சம்பாதிப்பவராகவே இருந்தாலும்) எடுக்கும் எந்த முடிவும் அமைப்பிலுள்ள பிறரையும் பாதிக்கும் என்பதே. அதனால் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் (பதின்ம வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை விட்டு விடலாம், மிஞ்சுவது கணவன் மனைவி இருவரும்) எவரொருவர் எடுக்கும் நிதிசார்ந்த முடிவகள் பற்றித் தெளிவாக அறிந்திருப்பதுடன், அந்த நிதிசார்ந்த முடிவுகள் அவர்களது எதிர்கால நிதி வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதைத் தெளிந்து இருப்பது மிகவும் அவசியம். ஆக, இருவரும் கலந்து பேசி எடுக்கும் நிதி முடிவுகளினால் ஏற்படும் எதிர்கால ஏற்ற இறக்கங்களை இருவரும் சேர்ந்தே சந்திப்பதே சிறந்த குடும்ப நிதி மேலாண்மை எனலாம். இங்கே நாம் அவர்கள் எடுக்கும் முடிவிகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேசவில்லை. அது வேறு விசயம். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய நிபுணத்துவம் பற்றியது.

மேலே சொன்னபடி, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் நிதி முடிவுகள் இருவரும் கலந்து பேசியே எடுக்கப் படுகின்றன (எங்களது அனுபவத்திலிருந்தே சொல்கிறோம்). இதற்குக் காரணமாக இவற்றைச் சொல்லலாம்.
·         திருமணத்திற்கு முன்பே இருவரும் வேலைக்குச் சென்று வருவதால் ஏற்படும் பணம் சம்பாதிப்பது பற்றிய புரிதல் (இது வீட்டில் இருக்கும் மனைவிக்குக் குறைவு)
·         சம்பாதிப்பது பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் (வீட்டுப் பெண்கள் ஒரு சிறு விசயத்துக்கூட கணவனைப் பணத்திற்காக எதிர்பார்ப்பது – கொடுக்க மாட்டார் என்பதில்லை, ஆனால் இது ஒரு விதமான (அவர்களுக்குச் சலிப்பூட்டகூடிய) சார்ந்திருக்கும் மனப்பாங்கையே தருகிறது)
·         வேலைச் சூழலில் இருந்து (சக பணியாளர்களின் அனுபவங்கள் மற்றும் நிதிப்பிரச்சினைகள் மூலமாக) ஒரு பெண் தெரிந்துகொள்வது. அதன் மூலமாக கணவனுக்கு இணையாக குடும்ப நிதி மேலாண்மையில் பங்களிப்பது. வீட்டுப் பெண்களுக்கு இது தங்களது குடும்ப நபர்களிடமிருந்தே கிடைக்கும்.

ரி. அப்படியென்றால் வீட்டிலிருக்கும் பெண்கள் அதைச் சிறப்பாகச் செய்யமுடியாதா? கண்டிப்பாக முடியும். அப்படியுள்ள குடும்பங்களும் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன. ஆனால் மொத்ததில் ஒன்றிரண்டே. அதற்குக் காரணமாக நாங்கள் பார்ப்பது கணவர்களின் இடைவிடாத ஊக்கமும் நச்சரிப்பும்தான். நீண்ட கால நோக்கில் பார்த்தால் இந்த கணவர்கள் குடும்ப நிதி மேலாண்மையை எளிதாக்குகிறார்கள். மனைவிக்கு நிதிசார்ந்த முடிவுகளை (எந்தச் சோப்பை வாங்குவது என்பது பற்றியல்ல) எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாக துணிச்சலையும் பங்களிக்கும் மனப்பாங்கையும் தருகிறார்கள். இது எதிர்காலத்திற்கு (மிக வேகமாக நகரமயமாகும், மனித உறவுகள் அந்நியமாகிக் கொண்டிருக்கிற இந்தியா) மிகவும் அவசியமாகும். இனி வரும் காலத்தில் பிள்ளைகளோடு வாழ்வது என்பது சாத்தியமல்ல. ஓய்வுக் காலத்தை கணவனும் மனைவியும் சேர்ந்துதான் ((உறவினர் மற்றும் பிள்ளைகளின் அண்மையின்றி) வாழ வேண்டிய சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

தற்கெல்லாம் மேலாக, ஒரு கணவன் தான் இல்லாத போது தனது மனைவி குடும்பத்தை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதை எண்ண வேண்டியிருக்கிறது. முக்கியமாக எல்லாவற்றையும் கடன் வாங்கி நுகரும் இந்தக் காலத்தில். பொதுவாக ஒற்றை முடிவு (கணவனே அனைத்து நிதி முடிவுகளையும் எடுப்பார்) அதிகாரம் கொண்ட குடும்பங்களில் அது ஏன் நடக்கிறது என்று எண்ணும்போது கீழ்க்கண்ட காரணங்கள் நினைவுக்கு வருகின்றன.
1.   வேலைக்குச் செல்லும் கணவன் தனது தந்தையைப் பிரதியெடுப்பது (இது 1970கள் இல்லை என்பதை உணராமல்).
2.   தானே அனைத்தையும் எல்லாக் காலத்திலும் பார்த்துக் கொள்ளமுடியும் என்ற தவறான புரிதல் (தனது நீடித்த உடல் நலம், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய போதிய புரிதலின்மையின் விளைவு).
3.   தான் சம்பாதித்த பணத்தைச் செலவிடுவதை யாருக்கும் (மனைவிக்கும் கூட) சொல்லதேவையில்லை என்ற மனப்பாங்கு. இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. தான் யாருக்கும் (உறவினர்கள், நண்பர்கள்) உதவி செய்வது மனைவிக்குப் பிடிக்காது என்பதால் மறைப்பதும் உண்டு.
4.   முன்னதுக்கு முற்றிலும் எதிரானது. குடும்பத்தைச் சமாளிக்க தான் வாங்கும் கடன் மனைவிக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம். பணப் பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியாதவன் என்ற பிம்பம் குடும்பத்தின் மீதான தனது அதிகாரத்தைச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் கூட இதற்கு ஒரு காரணம்.
5.   மனைவியின் ஆற்றலைக் குறைவாக எடைபோடுதல் (சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது தவிர வேறொன்றும் தெரியாது என்ற மனப்பாங்கு). பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரியான மனைவியையே கூட இப்படி வைத்திருப்பார்கள்.

ணவர்களையே இதற்கு முழுப் பொறுப்பாக்க முடியாது. கணவர் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகள் தன்னையும் குழந்தைகளையும் சேர்த்தே பாதிக்கும் என்று மனைவி உணரவேண்டும். அதனால், அதை அறிந்து கொள்வதிலும், அது பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்வதிலும் தனக்கு இருக்கும் உரிமையை (பொறுப்பை) வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதொன்றும் கணவனை அவமரியாதை செய்வதாகாது. எதையாவது செய்து தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும் என்று வசதியாக இருந்துகொள்வது மிகவும் தவறு. கார்ப்பரேட் வேலையானாலும் சரி, தொழில் முனைவோரானாலும் சரி நிச்சயமற்ற நிதிச் சூழலை எதிர்கொள்ள குடும்பத்தில் இருவருமே சமமாகப் பங்களிக்க வேண்டிய காலம் இது.