Friday, April 29, 2011

மருத்துவக் காப்பீடு

நண்பன் ஒருவன் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றில் சீனியர் மேனேஜராக இருக்கிறான். சமீபத்தில் நடந்த அவனது திருமணத்திற்க்காக சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்க வேண்டியிருந்தது. அதுவும் கடந்த இரு வருடங்களில் சுமார் இரண்டு லட்ச ருபாய் மருத்துவ செலவு செய்ததால் நேர்ந்தது என்று நினைக்கிறேன்.

அந்தப் பங்குகள் இருபது வருடங்கள் கழித்து என்ன மதிப்பில் இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அவனது எதிர்கால நிதி வளத்திற்கு பெரிதும் கைகொடுக்கும் பங்குகள். சில ஆயிரம் செலவில் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். இத்தனைக்கும் அவன் இன்சூரன்ஸ் துறையில் இருப்பவன். எதிர்பாராத மருத்துவ செலவுகள் எதிர்கால நிதி வளத்தைப் பெரிதும் பாதிக்கும். முக்கியமாக ஒய்வு கால வாழ்வை.

சரியான மருத்துவக் காப்பீட்டை தேர்ந்து எடுப்பது முக்கியம். அதற்குகாப்பீடு விற்பனை செய்பவர்கள் உதவமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. தங்களது சிறந்தது என்று நிறுவ.
காப்பீடு எடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

காப்புறுதிக் கட்டணம் (Premium)
மருத்துவ செலவுகள் ஏறிக்கொண்டே இருப்பதால் நிறுவனங்களும் பிரீமியத்தை கூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தங்களது முந்தைய இழப்பு கோரிக்கைகளை (claims) வைத்தும் அவ்வாறு செய்வார்கள்.
பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சொந்த இழப்பு கோரிக்கை (Claims) புள்ளி விவரங்களின் அடிப்படையில் காப்புறுதித் தொகையை மாற்றுவார்கள். மருத்துவச் செலவு வீக்கம் (Medical Inflation) இதற்கு காரணம். மிகக் குறைந்த தொகையை வசூலித்த ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென்று பலமடங்கு உயர்த்தியது ஒரு உதாரணம். நீங்கள் உடனே வேறு நிறுவனத்திற்கு மாறினால் இழப்பு உங்களுக்குத் தான். முன்கண்டறியப்பட்ட நோய்களுக்கான (Pre existing Diseases) காத்திருப்புகாலம் (Waiting Period) மீண்டும் புதிதாக ஆரம்பிக்கும். கந்தசாமிக்கு இதய நோய் இருப்பது காப்பீடு எடுக்கும் போது மருத்துவ சோதனையில் தெரிய வந்தது. காப்பீட்டு நிறுவனம் அதனால் இதய நோய் குறித்த செலவுகளை கந்தசாமிக்கு 4 வருடங்கள் கழித்தே ஏற்கும். அந்த நோய்க்கு காத்திருப்புக் காலம் 4 வருடங்கள். எந்த காப்பீட்டு நிறுவனமும் செய்யக்கூடிய ஒன்றுதான். அதனால் காப்பீடு எடுத்துவிடுகிறார். இரண்டு வருடங்கள் கழித்து நிறுவனம் தொகையை ஏற்றி விடுகிறது (ரூ. 6000. கட்டியவர் ரூ. 14000 கட்டவேண்டும்). கடுப்பான கந்தசாமி வேறு நிறுவனத்திற்கு போகிறார். அங்கு அவருக்கு குறைந்த தொகையில் காப்பீடு கிடைக்கிறது. ஆனால் இதய நோய் காத்திருப்புக் காலம் 4 வருடங்கள் மீண்டும் தொடங்கும். ஏற்கனவே 2 வருடங்கள் காத்திருந்தது வீண். விலை குறைவான காப்பீடு சிறந்த காப்பீடு ஆகாது.

முன்கண்டறியப்பட்ட நோய்கள் (Pre-existing Diseases)
காப்பீடு எடுப்பதற்கு முன்பே உங்களுக்கு இருக்கும் நோய்களே முன்கண்டறியப்பட்ட நோய்கள் ஆகும். ஆஸ்துமா, புற்று நோய், நீரிழிவு, இதய நோய் போன்றவை.
காப்பீடு எடுக்கும் பொது மருத்துவ சோதனையில் ஏதேனும் நோய் தெரிய வந்தால் காப்பீட்டு நிறுவனம் என்ன செய்யலாம்?
  • காப்பீட்டை மறுக்கலாம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, காப்பீட்டு நிறுவனங்கள் முன்கண்டறியப்பட்ட நோய்களைக் காரணம் காட்டி காப்பீட்டை மறுக்க முடியாது. அதே போல காப்பீட்டுக் காலத்தில் வாடிக்கையாளருக்கு உண்டாகும் நோய்களுக்கான மருத்துவச் செலவுகளையும் நிராகரிக்க முடியாது.
வழக்கு - வாடிக்கையாளர் யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பனியில் 1995, ஏப்ரலில் மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறார். வருடம் தவறாமல் காப்புறுதி தொகை (Premium) செலுத்துகிறார். மூன்று வருடங்களுக்குப் பின் இதய நோய் பாதிப்பினால் மருத்துவமனை சென்றார். ஆஞ்சியோ செய்யப்படுகிறது. நிறுவனம் இழப்பைக் கொடுத்தது. வாடிக்கையாளர் 2001 ஜனவரியிலிருந்து 2002 ஏப்ரல் வரை பல அறுவை சிகிச்சைக்கு ஆளாகிறார். காப்பீட்டு நிறுவனம் பல சிகிச்சைக்குப் பணம் கொடுத்தாலும் 2002 ஏப்ரலில் நடந்த பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டது. காரணம் - உயர் இழப்புக் கோரிக்கை விகிதம் (High claim ratio).

  • காத்திருப்பு காலம் (Waiting period).
முன் கண்டறியப்பட்ட நோய்களுக்கான காத்திருப்புக் காலத்தைப் புகுத்துவது. பெரும்பாலான நோய்களுக்கு 4 வருட காத்திருப்புக் காலம் திணிக்கப்படுகிறது.

  • அதிக காப்புறுதிக் கட்டணம் (premium) வசூலிக்கலாம்.
உப எல்லைகள் ( Sub Limits)
கந்தசாமி ரூ. 5 லட்சத்திற்கு காப்பீடு எடுத்திருக்கிறார். விபத்தில் ரூ. 1 லட்சம் மருத்துவச் செலவாகிறது. காப்பீட்டின் படி அரை வாடகைக்கான உப எல்லை ஒருநாளைக்கு ரூ. 2000. பதினைந்து நாள் சிகிச்சை எடுத்திருக்கிறார். மருத்துவமனை ஒரு நாளுக்கு ரூ. 3000 அறை வாடகை வசூலிக்கிறது. மொத்தம் ரூ. 45000 (15*ரூ. 3000). காப்பீட்டு நிறுவனம் ரூ. 30000 (15* ரூ.2000) மட்டுமே கொடுக்கும். அறை வாடகையைப் போலவே சில சிகிச்சைகளுக்கும் உப எல்லைகள் உள்ளன. காப்பீடு எடுக்கும் போது உப எல்லைகளை கவனமாகப் பார்க்க வேண்டும்.

புதுப்பித்தல் (Renewal)
சில நிறுவனங்கள் காப்பீடைப் புதுப்பிப்பதற்கு வயது வரம்பு வைத்திருக்கின்றன. காப்பீட்டு ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம் ( IRDA - Insurance Regulatory and Development Authority) புள்ளிவிவரத்தின் படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களே மிகக் குறைந்த காப்பீடு கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பல காப்பீட்டு நிறுவனங்கள் 65 வயதுக்கு மேல் புதுப்பிக்க மாட்டார்கள். ஆனால் சில நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் (Lifetime Renewability) உத்தரவாதம் அளிக்கின்றன. காப்பீடு எடுக்கும் போது இதை கவனிக்க வேண்டும்.

விலக்குகள் ( Exclusions)
சில நோய்கள் முதல் வருடத்தில் சேர்க்கப்படாது. சில முற்றிலுமாக விலக்கப்பட்டுவிடும். அவை எவையெனப் பார்க்க வேண்டும். சில நோய்களுக்கு 4 ஆண்டு காத்திருப்புக் காலம் உண்டு. விலக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் குறித்து காப்பீடு எடுக்கும் போது கவனம் தேவை. விலக்குகள் குறைவாக உள்ளதை தேர்ந்தெடுக்கலாம்.