Monday, November 19, 2012

மருத்துவக் காப்பீடு

 
ந்த வார நாணயம் விகடனில் வெளியான எனது மருத்துவக் காப்பீடு பற்றிய கட்டுரை இங்கே. - அபூபக்கர் சித்திக், CFP

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பொதுக் காப்பீடு நிறுவனங்களே அதிக அளவில் வழங்கி வந்தன. ஆனால், சமீப காலமாக ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் இந்த பாலிசிகளை வழங்கி வருகின்றன. இவற்றில் எது பெஸ்ட் சாய்ஸ்? என்பதைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் அபுபக்கர்.  


''ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் (Stand alone) மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் பல்வேறு வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இவற்றில் ஏராளமான உட்பிரிவுகள் அடக்கம். இவற்றில் நமக்குத் தேவையான மற்றும் சரியான திட்டத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதைப் பார்க்கும் முன் நமக்குக் கிடைக்கும் பல்வேறு திட்டங்களை வகைப்படுத்தி முதலில் அறிந்துகொள்வோம்.
* மருத்துவமனை செலவு (Hospital Cash);
* பணப் பலன் (Defined Benifit plan);
* தீவிர நோய் பாதிப்பு (Critical illness);
* தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal accident);
* ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் (comprehensive health insurance)
இந்த ஐந்து வகையான திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களைச் சேர்த்தோ அல்லது தனித் தனியாகவோ மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறது.
மருத்துவமனை செலவு!
மருத்துவப் பரிசோதனை இல்லை; வயது வரம்பு இல்லை; எந்த மருத்துவமனையிலும் சேரலாம் என்று வரும் விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தது.
இந்த வகையானத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை உதாரணத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு தினத்திற்கும் தருவார்கள். இந்த தொகைக்கும் மருத்துவச் செலவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக, நீங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால், இந்த பாலிசிபடி 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த ஐந்து நாட்களில் நீங்கள் செய்த மருத்துவச் செலவுகள் எதற்கும் கிளைம் செய்ய முடியாது.
ஏற்கெனவே, பிரதான மருத்துவக் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்கள் வேண்டுமானால் இத்தகைய பாலிசியைக் கூடுதலாக எடுக்கலாம். ஆனால், இதற்கான பிரீமியம் அதிகம். பொதுவாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற பாலிசியை அதிகமாக விற்பனை செய்கின்றன.
உங்களுக்கு இந்த பாலிசி தேவைப்பட்டால், பொதுக் காப்பீடு அல்லது தனித்துவ மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முழுமையான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் ரைடர் பாலிசியாக (துணை பாலிசி) இதை சேர்த்துக் கொள்ளலாம்.
பணப் பலன்!
இந்த வகையான திட்டம் முன்வடிவமைக்கப்பட்ட மருத்துவச் செலவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தொகையை அளிக்கும். இதில் 90% வரையறுக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவைச் சார்ந்தது. இந்த வகையான திட்டங்களில் பல நேரங்களில் நீங்கள் உங்கள் கையிலிருந்து தொகையை தர நேரிடும். இதிலும் ஏகப்பட்ட விதிமுறைகள், வருடாந்திர வரன்முறை, அட்டவணையில்லா நோய்கள் என்று ஏக கெடுபிடிகள். இந்த வகையான திட்டங்களை சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக விநியோகிக்கின்றன. கவனித்து பாலிசிகளை தேர்வு செய்யவும்.    
தீவிர நோய் பாதிப்பு!
மிகக் கடினமான நோய்கள் கண்டறியப்பட்ட பின் ஒரு பெருந்தொகையோ அல்லது மாதாந்திர தொகையோ, அல்லது மருத்துவச் செலவை ஏற்கக்கூடிய பாலிசி இது. இத்தகையத் திட்டங்களை எல்லா தரப்பு நிறுவனங்களும் அளிக்கின்றன. புற்றுநோய், மூளை புற்றுநோய், பக்கவாதம், இருதய பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவற்றிற்கு இதன் கீழ் கவரேஜ் கிடைக்கும். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தீவிர நோய் வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் பரம்பரை வியாதிகள் உடையவர்களுக்கும் இந்த திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்து அத்துடன் தீவிர நோய் பாதிப்பு பாலிசியை துணை பாலிசியாக எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.
தனிநபர் விபத்துக் காப்பீடு!
இந்த பாலிசியை வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். செய்யும் தொழில் வகையைப் பொறுத்து பிரீமியம் மாறும். இந்த வகையானத் திட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உடல் சேதங்களுக்கோ, உயிர் இழப்பிற்கோ இழப்பீடு வழங்கப்படும். பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் விபத்துக் காப்பீடு திட்டம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசிகளில் ஓரிரு பயன்பாடு குறைவாக இருக்கும். 10 லட்ச ரூபாய் கவரேஜ் ரைடர் பாலிசிக்கு நிறுவனத்தைப் பொறுத்து 350 ரூபாய் முதல் 700 ரூபாய் பிரீமியம் இருக்கும். பல பொதுக் காப்பீடு நிறுவனங்களின் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிக அத்தியாவசியமான பாலிசி.
ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டம். இத்திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டறியப்பட்ட சில நோய்களைத் தவிர, அனைத்து மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியது. பொதுவாக, உள்நோயாளி பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துச் செலவுகளும் குறிப்பாக அறை வாடகை, ஆய்வகக் கட்டணம், நர்ஸிங் கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் ஏற்கப்படுகிறது. ஒருவரின் மருத்துவமனைச் செலவுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது என்றால், அந்த நோய்க்குரிய மருத்துவமனை உள்நோயாளி செலவினங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும்முன் ஏற்பட்ட செலவுகளும், அதற்குபின் ஏற்படும் செலவுகளும் (Pre & Post Hospitalization) காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
இதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இவை குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது. விலையை வைத்து மட்டும் பாலிசிகளை மதிப்பிட முடியாது. இத்தகையச் சிறந்த திட்டங்களை நியூ இந்தியா, யுனைடெட், பஜாஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் ஸ்டார், மேக்ஸ், புபா, அப்போலோ போன்ற தனித்துவ காப்பீடு நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இத்தகைய திட்டங்கள் இல்லை.
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்கள் கிளைம் சேவைகளை மூன்றாம் நிறுவனத்திடம் (TPA - Third Party Administrator) தந்துவிடுகின்றன. அனைத்து சேவைகளுக்கும் நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் சேவை நிறுவனத்தையே அணுக வேண்டும்.
முடிவாக..!
பொதுவாக எந்த மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மகப்பேறு, பல் சார்ந்த சிகிச்சைகள் (விபத்தினால் ஏற்படுவதைத் தவிர), புறநோயாளி சிகிச்சைகள் மற்றும் ஒரு நாளுக்குள் வரும் உட்பிரிவு சிகிச்சை செலவினங்களுக்கு இழப்பீடு தருவதில்லை. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சில மணி நேரத்திலேயே அனுப்பி விடப்படும் சிகிச்சைகளும் உண்டு. உதாரணமாக, கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றல் போன்ற 130-க்கும் மேற்பட்ட உலக சுகாதார நிறுவனம் பட்டியலில் உள்ள நோய்களுக்கு உட்பிரிவு சிகிச்சை இல்லாமலேயே செலவுகள் காப்பீடு நிறுவனங்களால் ஏற்கப்படுகின்றன.
மேலும், நிறுவனங்கள் அளித்துள்ள மருத்துவமனை சேவைப் பட்டியலை பார்ப்பதும் முக்கியம். ஏனெனில், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் ஆகும் செலவுகளை காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக செலுத்திவிடுகிறது. மற்ற மருத்துவமனைகளில் நீங்கள் முதலில் செலவு செய்துவிட்டு, பிறகு உரிய ஆவணங்களை காப்பீடு நிறுவனத்திடம் உரிய காலத்திற்குள் செலுத்திவிட்டு பணத்தை பெற வேண்டிவரும். அதிலும் சில காப்பீடு நிறுவனங்கள் 10 முதல் 20% தொகையைப் பிடித்தம் செய்கின்றன.
எனவே உஷார்!''
கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டோம்! இனி எது பெஸ்ட் என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!

Saturday, September 15, 2012

சீரான முதலீட்டுத் திட்டம் - பகுதி 1

ந்த முதலீட்டு வகை பற்றியும் உணர்சிகரமான பிடிப்பு தேவையற்றது. பொதுவாகவே முதலீட்டு வகைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத (மெத்தப் படித்தவர்களும் அடக்கம்) ஒரு நாட்டில் சிக்கலான, வெளிப்படைத்தன்மையற்ற, அபாயகரமான ஏற்ற இறக்கங்களுடைய நீண்டகால முதலீடுகள் பற்றிய தெளிவு ஏற்பட அதிக காலம் ஆகலாம். முதலில் அதைக் கற்றுக் கொடுப்பவர்கள் உள்நோக்கம் ஏதுமற்ற நேர்மையோடு இருக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சீரான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றிய தெளிவை கொடுக்கவே இந்தக் கட்டுரை.
மாத வருமானக்காரர்களோ, பெரு முதலீட்டாளர்களோ சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும் விதங்கள் பற்றி நாம் முன்பு பேசியிருக்கிறோம். http://panavivakaram.blogspot.in/2011/09/blog-post_26.html
சீரான முதலீட்டுத் திட்டம் ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும் (Mutual Fund). நேரடியாக பங்குகளை வாங்கி வைத்து நேரம் பார்த்து விற்று லாபமீட்டும் வேலையைச் செய்து அந்தத் தொகுப்பை (Portfolio) நாள்தோறும் நிர்வகிக்கக் கூடிய நேரமும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள், அவ்வாறு செய்யக்கூடிய தகுதி (கல்வியும் அனுபவமும்) உள்ளவர்களிடம் தங்கள் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வது. இப்படிச் சேரும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் நிதியை (Mutual Fund) நிர்வகிப்பவரே பரஸ்பர நிதி நிர்வாகி (Fund Manager). முதலீட்டாளர்களிடம் ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு இதைச் செய்யும் நிறுவனமே சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Management Company). சொத்து என்றாலே மண்ணும் பொன்னும் மட்டுமல்ல.
இப்படி ஒரு நிதியில் சேரும் பணம் நிர்வாகியால் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு நிதியும் ஒவ்வொரு வகையில் நிர்வகிக்கப்படும். நிதியை ஆரம்பிக்கும் போதே (Initial Public Offering - IPO) நிர்வாகி அதன் வகை பற்றி அறிவிப்பார். எடுத்துக்காட்டாக 'டாப் 100' என்ற நிதியில் பணம் முழுதும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 'பாலன்சுடு பண்டில்' 50 சதம் பங்குகளிலும் 50 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இது போல. 
முதலீட்டாளர் தனது ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைக்கு ஏற்ப ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆக சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்றால் என்ன?
பரஸ்பர நிதி முதலீட்டில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் நேரடியான பதிப்பு எப்போதும் உண்டு. நீங்களே வாங்கி நிர்வகிக்கும் பங்குகளின் தொகுப்பு போல அது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்ன அது சற்று தேர்ந்த அனுபவமுள்ள தகுதி படைத்த நிர்வாகியால் செய்யப்படும். ஆனால் மொத்த முதலீடாக இல்லாமல் சிறிது பணத்தை மாதந்தோறும் ஒரு நிதியில் போடுவதே சீமுதி. எடுத்துக்காட்டாக மாதம் ரூ.500 போல. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கியமான பயன், நல்ல பெரும் பங்குகளை (பல நூறு ருபாய் மதிப்புள்ள) வாங்கும் அளவு பணம் இல்லாத போது இப்படிப்பட்ட நிதியில் பணம் போடுவதன் மூலம் அப்பயனை அடைய முடியும். 

சில அனுகூலங்கள்  
  • பங்குச் சந்தையின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்ப ஒரு அலகின் (Unit) விலை ஏறி இறங்கும். சீராகத் தொடர்ந்து முதலீடு செய்கையில் வெவ்வேறு விலையில் ஒரு அலகு வாங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படியில் அது சாதகமான சராசரி விலையை அளிக்கிறது. இதை 'விலைச் சராசரி' (Ruppee Cost Averaging) என்கிறார்கள். விளங்கிக்கொள்ள படத்தைப் பாருங்கள்.Rupee Cost Averaging        மொத்த முதலீடு என்றால் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அலகு இங்கே சராசரி விலை ரூ.9.836 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுப்பெருக்கத்தின் சக்தி. ஏற்கனவே உள்ள முதலீடு பணம் ஈட்டும் போது மேலும் புதிய முதலீடுகள் சேர்ந்து கொண்டே போகையில் பணம் பன்மடங்காகப் பெருகும்.
     Power of Compounding 
அது போக சீரான முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயனே சந்தை காளையா கரடியா என்று நேரம் பார்த்துக் கிடக்கத் தேவையில்லாமல் எல்லாக் காலத்திலும் கவலையில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யத் தோதானது என்பதே.
 
எப்படிச் செய்வது? 
  • எதற்காக (எதிர்காலத் திட்டங்கள்- திருமணம் போன்றவை) முதலீடு செய்கிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்வது.
  • அந்தக் கால அளவிற்கு ஏற்ப தேவைப்படும் மாதத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் கணித்துக் கொள்வது.
  • சரியான நிதி திட்டத்தை அனுபவமுள்ள நிதித் திட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.
  • பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீண்டகாலம் முதலீட்டைச் செய்வது.
  • நிதித் திட்ட ஆலோசகரின் உதவியுடன் திட்டத்தைக் கண்காணிப்பதுடன் தேவைப்பட்டால் மாற்றம் செய்வது.
 

Friday, January 20, 2012

உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning)

அல்லா உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள். அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள். உடையும் வழங்குங்கள்.  அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்.
- திருக்குர்ஆன்

ழைய திரைப்படங்களில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கிழவர் வக்கீலைக் கூப்பிடச் சொல்வார். இனிமேல் தான் நீண்ட காலம் வாழ மாட்டோம் என்று உணர்ந்து தனது சொத்தை உயில் எழுதி வைக்க நினைத்து அப்படிச் சொல்வார். தொலைந்து போன உயிலைக் கண்டுபிடிப்பது போன்று கூட திரைக்கதைகள் உண்டு. அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். பொதுவாகவே நமது சூழலில் இதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வேலை என்ற எண்ணமே இருக்கும். ஆனால், சிறிய சொத்தானாலும் பெரிய சொத்தானாலும் பிரச்சினை ஒன்றுதான்.

உடைமைத் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்களிடம் உள்ள சொத்தை (உடமை) அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்தளிப்பதே உடமைத் திட்டமிடுதல். சொத்து என்றதும் பலவாறாக நினைத்து வீடு, நிலங்கள், தோட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ரொக்கப் பணம், சொத்து, தங்கம், காப்பீட்டுத் திட்ட முதலீடு, சேம நல நிதி, பங்குகள், வைப்பு நிதி, சொத்திலிருந்து வரும் வருமானம் போன்ற அனைத்தும் உடமை (Estate) என்றே கருதப்படும்.
குறிக்கோள் 
  • நீங்கள் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னாலும் சொத்தை நிர்வகிப்பது.
  • உங்கள் சொத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத அபாயங்களிலிருந்து அவற்றைக் காப்பது. 
  • அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு அதைச் சரியானவர்களிடம் கொண்டு செல்வது.
சேவைகள்
  • ஆலோசனை சேவை. உடமைத் திட்டமிடுதல் பற்றிய வரையறைக்குள் திறம்பட சொத்துக்களை நிர்வாகம் செய்வதோடு அடுத்த கட்ட வாரிசுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும் மேற்பார்வை செய்வது.
  • உயில்கள், டிரஸ்ட் ஏற்படுத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது.
  • அசையும் சொத்துக்களான நகைகள், உரிமைப் பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. இந்த சேவைகளை சில வங்கிகளும் அளிக்கின்றன.
டிரஸ்ட் - இது ஒரு நிர்வாக அமைப்பு. ஒருவரின் வாழ்நாளில் சொத்துக்களை நிர்வாகிப்பது. 
உயில் - தனக்குப் பிறகு சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்று ஒருவர் எழுதி வைக்கும் சட்ட ஆவணம்.

தற்போதைய வளர்ந்து வரும் நிதிச் சூழலில் சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் இது போன்ற நிபுணத்துவ சேவைகளை தகுதியான ஆலோசகரிடம் பெறுவது முக்கியம். இல்லாவிட்டால் உழைப்பின் பலனை சரியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடலாம். ஒரு நல்ல நிதித் திட்டமிடுபவரை (CFP - Certified Financial  Planner) பார்க்கலாம். இந்த இணையம் உதவும்.

அபூபக்கர் சித்திக், CFP