Saturday, September 15, 2012

சீரான முதலீட்டுத் திட்டம் - பகுதி 1

ந்த முதலீட்டு வகை பற்றியும் உணர்சிகரமான பிடிப்பு தேவையற்றது. பொதுவாகவே முதலீட்டு வகைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத (மெத்தப் படித்தவர்களும் அடக்கம்) ஒரு நாட்டில் சிக்கலான, வெளிப்படைத்தன்மையற்ற, அபாயகரமான ஏற்ற இறக்கங்களுடைய நீண்டகால முதலீடுகள் பற்றிய தெளிவு ஏற்பட அதிக காலம் ஆகலாம். முதலில் அதைக் கற்றுக் கொடுப்பவர்கள் உள்நோக்கம் ஏதுமற்ற நேர்மையோடு இருக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சீரான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றிய தெளிவை கொடுக்கவே இந்தக் கட்டுரை.
மாத வருமானக்காரர்களோ, பெரு முதலீட்டாளர்களோ சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும் விதங்கள் பற்றி நாம் முன்பு பேசியிருக்கிறோம். http://panavivakaram.blogspot.in/2011/09/blog-post_26.html
சீரான முதலீட்டுத் திட்டம் ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும் (Mutual Fund). நேரடியாக பங்குகளை வாங்கி வைத்து நேரம் பார்த்து விற்று லாபமீட்டும் வேலையைச் செய்து அந்தத் தொகுப்பை (Portfolio) நாள்தோறும் நிர்வகிக்கக் கூடிய நேரமும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள், அவ்வாறு செய்யக்கூடிய தகுதி (கல்வியும் அனுபவமும்) உள்ளவர்களிடம் தங்கள் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வது. இப்படிச் சேரும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் நிதியை (Mutual Fund) நிர்வகிப்பவரே பரஸ்பர நிதி நிர்வாகி (Fund Manager). முதலீட்டாளர்களிடம் ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு இதைச் செய்யும் நிறுவனமே சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Management Company). சொத்து என்றாலே மண்ணும் பொன்னும் மட்டுமல்ல.
இப்படி ஒரு நிதியில் சேரும் பணம் நிர்வாகியால் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு நிதியும் ஒவ்வொரு வகையில் நிர்வகிக்கப்படும். நிதியை ஆரம்பிக்கும் போதே (Initial Public Offering - IPO) நிர்வாகி அதன் வகை பற்றி அறிவிப்பார். எடுத்துக்காட்டாக 'டாப் 100' என்ற நிதியில் பணம் முழுதும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 'பாலன்சுடு பண்டில்' 50 சதம் பங்குகளிலும் 50 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இது போல. 
முதலீட்டாளர் தனது ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைக்கு ஏற்ப ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆக சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்றால் என்ன?
பரஸ்பர நிதி முதலீட்டில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் நேரடியான பதிப்பு எப்போதும் உண்டு. நீங்களே வாங்கி நிர்வகிக்கும் பங்குகளின் தொகுப்பு போல அது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்ன அது சற்று தேர்ந்த அனுபவமுள்ள தகுதி படைத்த நிர்வாகியால் செய்யப்படும். ஆனால் மொத்த முதலீடாக இல்லாமல் சிறிது பணத்தை மாதந்தோறும் ஒரு நிதியில் போடுவதே சீமுதி. எடுத்துக்காட்டாக மாதம் ரூ.500 போல. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கியமான பயன், நல்ல பெரும் பங்குகளை (பல நூறு ருபாய் மதிப்புள்ள) வாங்கும் அளவு பணம் இல்லாத போது இப்படிப்பட்ட நிதியில் பணம் போடுவதன் மூலம் அப்பயனை அடைய முடியும். 

சில அனுகூலங்கள்  
  • பங்குச் சந்தையின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்ப ஒரு அலகின் (Unit) விலை ஏறி இறங்கும். சீராகத் தொடர்ந்து முதலீடு செய்கையில் வெவ்வேறு விலையில் ஒரு அலகு வாங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படியில் அது சாதகமான சராசரி விலையை அளிக்கிறது. இதை 'விலைச் சராசரி' (Ruppee Cost Averaging) என்கிறார்கள். விளங்கிக்கொள்ள படத்தைப் பாருங்கள்.Rupee Cost Averaging        மொத்த முதலீடு என்றால் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அலகு இங்கே சராசரி விலை ரூ.9.836 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுப்பெருக்கத்தின் சக்தி. ஏற்கனவே உள்ள முதலீடு பணம் ஈட்டும் போது மேலும் புதிய முதலீடுகள் சேர்ந்து கொண்டே போகையில் பணம் பன்மடங்காகப் பெருகும்.
     Power of Compounding 
அது போக சீரான முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயனே சந்தை காளையா கரடியா என்று நேரம் பார்த்துக் கிடக்கத் தேவையில்லாமல் எல்லாக் காலத்திலும் கவலையில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யத் தோதானது என்பதே.
 
எப்படிச் செய்வது? 
  • எதற்காக (எதிர்காலத் திட்டங்கள்- திருமணம் போன்றவை) முதலீடு செய்கிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்வது.
  • அந்தக் கால அளவிற்கு ஏற்ப தேவைப்படும் மாதத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் கணித்துக் கொள்வது.
  • சரியான நிதி திட்டத்தை அனுபவமுள்ள நிதித் திட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.
  • பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீண்டகாலம் முதலீட்டைச் செய்வது.
  • நிதித் திட்ட ஆலோசகரின் உதவியுடன் திட்டத்தைக் கண்காணிப்பதுடன் தேவைப்பட்டால் மாற்றம் செய்வது.