Wednesday, February 13, 2013

பரேட்டோ விதி


த்மநாபன் சென்னையிலிருந்து இயங்கும் ஒரு நிதி திட்டமிடல் நிபுணர். தொடர்ந்து  நாணயம் விகடனில் நிதித் திட்டமிடல் பற்றியும் முதலீடுகள் பற்றியும் எழுதி வருகிறார். சன் செய்திகளிலும் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். பணவிவகாரத்தில் இவரது முதல் பதிவு இது.

பரேட்டோ விதி
இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், 20 சதவீத பணக்காரர்கள் உலகின் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பொருந்தினாலும் பெரும்பாலும் யாரும் அதைச் சிந்திப்பதில்லை.
ஒருவர் மதம் ரூ.50000 சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அதில் 80 சதவீதமான ரூ.40000 செலவு செய்துவிட்டு 20 சதவீதமான ரூ.10000 சேமிக்கிறார். இவர் 21 வயதில் வேலைக்குச் சென்று 25 வயதில் மணம் செய்கிறார். இவர் 55 வயதில் ஓய்வு எடுப்பதாக வைத்துக் கொண்டால் பணிக்காலம் இன்னும் 30 வருடங்கள் உள்ளன. ஒவ்வொரு சம்பள உயர்வுக்கும் சம விகிதாசாரத்தில் செலவும் இருக்கும். ஒரு கணக்குக்காக சம்பளமும் செலவும் அடுத்தட 30 வருடங்களுக்கு மாறாது என்று வைத்துக் கொள்வோம்.
ஆக அவர் அடுத்த 30 வருடத்தில் ரூ. 1.80 கோடி (50,000*12*30) சம்பாதிப்பார். அதில் 1.44 கோடி ரூபாயை தனது வாழ்க்கை முறையை தக்கவைக்க செலவு செய்து செய்தது போக மீதமுள்ள ரூ.36 லட்சம் மட்டுமே சேமிக்கப்படும்.
55 வயதுக்குப் பிறகு வருமானமே இருக்காது அல்லது மிகக் குறைந்த வருமானமே இருக்கும். 15% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி அவரது சேமிப்பு ரூ.10,000 அடுத்த 30 வருடத்தில் 7 கோடி ரூபாய் ஆகியிருக்கும். 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி கூட ரூ. 3.52 கோடி கிடைக்கும். இது அவரது மொத்த 30 வருட உழைப்பூதியத்தை விட அதிகம். வெறும் 3% அதிக வ.கூ.வ. விகிதம் முதலீட்டை இரட்டிப்பாக்கி விடுகிறது. தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் (SENSEX) 17% வ.கூ.வ. விகிதம் கொடுத்துள்ளது. உயர் தரமான பரஸ்பர நிதிகள் இதுவரை 20% க்கும் மேலான வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டில் 15% வ.கூ.வ. விகிதம் கிடைக்கும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.  
இங்கே பிரச்சினை என்னவென்றால், பலர் தங்களது வருமானத்தில் 10% கூட தொடர்ச்சியாக சேமிப்பதில்லை. செல்வ வளத்தை உருவாக்குவது குழந்தை விளையாட்டு, ஒழுங்கு மட்டும் இருந்தால்.