Wednesday, November 23, 2011

காப்பீடு எடுக்கும்போது செய்ய வேண்டியவை

ரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.
 நமது தலைமை நிதித் திட்டமிடுபவர், அபூபக்கர் சித்திக் (CFP), இதைப்பற்றிக் கூறும்போது வாடிக்கையாளர்கள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

  1. காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIG யில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். 
  2. கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைதீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப் படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.
  3. காப்பீடு என்பது வாடிக்கையாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப் படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.
  4. காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.
  5. கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.