Friday, January 20, 2012

உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning)

அல்லா உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள். அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள். உடையும் வழங்குங்கள்.  அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்.
- திருக்குர்ஆன்

ழைய திரைப்படங்களில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கிழவர் வக்கீலைக் கூப்பிடச் சொல்வார். இனிமேல் தான் நீண்ட காலம் வாழ மாட்டோம் என்று உணர்ந்து தனது சொத்தை உயில் எழுதி வைக்க நினைத்து அப்படிச் சொல்வார். தொலைந்து போன உயிலைக் கண்டுபிடிப்பது போன்று கூட திரைக்கதைகள் உண்டு. அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். பொதுவாகவே நமது சூழலில் இதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வேலை என்ற எண்ணமே இருக்கும். ஆனால், சிறிய சொத்தானாலும் பெரிய சொத்தானாலும் பிரச்சினை ஒன்றுதான்.

உடைமைத் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்களிடம் உள்ள சொத்தை (உடமை) அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்தளிப்பதே உடமைத் திட்டமிடுதல். சொத்து என்றதும் பலவாறாக நினைத்து வீடு, நிலங்கள், தோட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ரொக்கப் பணம், சொத்து, தங்கம், காப்பீட்டுத் திட்ட முதலீடு, சேம நல நிதி, பங்குகள், வைப்பு நிதி, சொத்திலிருந்து வரும் வருமானம் போன்ற அனைத்தும் உடமை (Estate) என்றே கருதப்படும்.
குறிக்கோள் 
  • நீங்கள் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னாலும் சொத்தை நிர்வகிப்பது.
  • உங்கள் சொத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத அபாயங்களிலிருந்து அவற்றைக் காப்பது. 
  • அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு அதைச் சரியானவர்களிடம் கொண்டு செல்வது.
சேவைகள்
  • ஆலோசனை சேவை. உடமைத் திட்டமிடுதல் பற்றிய வரையறைக்குள் திறம்பட சொத்துக்களை நிர்வாகம் செய்வதோடு அடுத்த கட்ட வாரிசுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும் மேற்பார்வை செய்வது.
  • உயில்கள், டிரஸ்ட் ஏற்படுத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது.
  • அசையும் சொத்துக்களான நகைகள், உரிமைப் பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. இந்த சேவைகளை சில வங்கிகளும் அளிக்கின்றன.
டிரஸ்ட் - இது ஒரு நிர்வாக அமைப்பு. ஒருவரின் வாழ்நாளில் சொத்துக்களை நிர்வாகிப்பது. 
உயில் - தனக்குப் பிறகு சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்று ஒருவர் எழுதி வைக்கும் சட்ட ஆவணம்.

தற்போதைய வளர்ந்து வரும் நிதிச் சூழலில் சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் இது போன்ற நிபுணத்துவ சேவைகளை தகுதியான ஆலோசகரிடம் பெறுவது முக்கியம். இல்லாவிட்டால் உழைப்பின் பலனை சரியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடலாம். ஒரு நல்ல நிதித் திட்டமிடுபவரை (CFP - Certified Financial  Planner) பார்க்கலாம். இந்த இணையம் உதவும்.

அபூபக்கர் சித்திக், CFP