Monday, June 6, 2011

எவ்வளவு ஆயுள் காப்பீடு தேவை?

நிதித் திட்டமிடுதலில் (Financial Planning) முக்கியமானது ஆயுள் காப்பீடு செய்துகொள்வதுதான். ஏனென்றால் நிதித்திட்டமிடுதலே ஒருவரது எதிர்கால வாழ்வு நிதி சார்ந்த பிரச்சினைகளினால் சீர்குலையக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒரு குடும்பத்தின் வருவாய்க்குக் காரணமானவர் இறந்து விட்டாலோ, விபத்தினால் வேலையைத் தொடர முடியாமல் போனாலோ, அக்குடும்பம் அதுவரை அனுபவித்து வந்த வசதிகள் மறைந்து விடும். மேலும் நீண்ட காலக் கடன்களுக்கும் (வீட்டுக் கடன்) அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். சில நேரங்களில் இருக்கிற சொத்துக்களைப் பறிகொடுக்க வேண்டியிருக்கலாம். சரியான ஆயுள் காப்பீடு இதைத் தவிர்க்கும்.
ஆக சரியான ஆயுள் காப்பீட்டு தொகையை எப்படிக் கணிப்பது?

இது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும் மூன்று முக்கியமான வழிகளைப் பார்க்கலாம்.
1. வருவாய் பதிலீடு அணுகுமுறை ( Income Replacement Approach)
இது ஒரு எளிதான அணுகுமுறை. இதில் கணக்கில் எடுக்கப்படும் விடயங்கள் என்ன?
  • வயது, தற்போதைய நிகர வருமானம்
  • தற்போதைய ஆயுள் காப்பீடு
  • மீதமுள்ள வருமானம் ஈட்டக்கூடிய வருடங்கள்
  • பதிலீடு செய்ய வேண்டிய வருமான விகிதம்
இந்த முறையில் காப்பீட்டுத் தொகையைக் கணக்கிடுவது சற்று மேம்போக்கானது. காப்பீடு எடுப்பவரின் முழுச் செலவுக் கணக்கு தெரியாத போது இம்முறை உதவும். இதன் குறையும் இதுதான். செலவு பற்றிக் கணக்கில் கொள்ளாதது. பொதுவாக சம்பாதிக்க ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு இது உதவும்.

2. செலவு அணுகுமுறை ( Expense Approach)
இது கொஞ்சம் அதிகமானவற்றை கணக்கில் எடுக்கும் முறை.
  • தற்போதைய வருமானம் ( வருமானம் ஈட்டும் திறன்)
  • எதிர்கால வாழ்நாள் செலவு ( பணவீக்கத்தையும் சேர்த்தே கணக்கிடப்படும்)
  • எதிர்பார்க்கப்படும் சேமிப்பு
  • கிடைக்கக்கூடிய ஓய்வூதியம்
நடுத்தர வயதுக்காரர்களுக்கு இவைகளைக் கொண்டு ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கலாம். செலவு மட்டுமே கணக்கிலெடுக்கப் படுவதால் இது சில சமயம் குறை காப்பீட்டுக்கு (Under Insurance) இட்டுச் செல்லும்.

3. இரட்டை அணுகுமுறை ( Hybrid Approach)
முன்னால் பார்த்த இரண்டையும் சேர்த்து, முழுமையான ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் அணுகுமுறை. இதில் முக்கியமானது மனித ஆயுள் மதிப்பு ( Human life Value). வார்ட்டனைச் (Wharton School of Business) சேர்ந்த சாலமன் எஸ். ஹுப்னர் ( Solomon S. Huebner), 1920 களில் இதைப் பிரபலப் படுத்தியதன் மூலம் ஆயுள் காப்பீட்டை அறிவியல் ரீதியாக அணுக வழி ஏற்படுத்தினார். வருமானம் ஈட்டுபவரின் இறப்பினால் ஒரு குடும்பம் எதிர்காலத்தில் எவ்வளவு பணம் இழக்கும் என்பதைக் கணக்கிடுவதே இந்த அணுகுமுறையின் மையப் புள்ளி.
  • வருமானம்
  • செலவு
  • மீதமுள்ள வருமான காலம்
  • எதிர்காலத் தேவைகளின் மதிப்பு ( பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கிடுவதன் மூலம் வரும் தொகை)
இதன் மூலம் ஓரளவு துல்லியமான ஆயுள் காப்பீட்டுத் தொகையைக் கணக்கிடலாம்.

பிறகு இவற்றையும் தாண்டிப் பல காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டன. ஆனாலும் ஒருவர் தனது வயதிற்கேற்ப ஆயுள் காப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்கவேண்டும். ஏனென்றால் ஒருவரின் பொருளாதார நிலை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருப்பதினால்.