Wednesday, August 24, 2011

தங்கம் இப்போது வாங்கலாமா?

2005 வாக்கில் நான் ஒரு பண்டக முன் ஒப்பந்தச் சந்தை (Commodities Futures Market) தரகு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பண்டகச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைக் கணிப்பதன் மூலம் வாடிக்கையாளருக்கு வர்த்தக லாபத்தை ஏற்படுத்த ஆலோசனை கூறுவதே ஒரு பகுத்தாய்வாளரின் (Analyst) பணி. ஆய்வு இரு வகைப்படும். முதலாவது ஒரு பண்டகத்தின் அடிப்படைக் காரணிகளை (உற்பத்தி மற்றும் நுகர்வுத் தேவை சம்பந்தமானது) ஆராய்வது. எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதோடு நுகர்வு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதைக் கணக்கிட்டு பார்ப்பதன் மூலம் அடையும் முடிவு. தேவை குறைந்து உற்பத்தி சீராக இருந்தால் விலை விழும். உற்பத்தி சீராக இருந்தும் தேவை கூடினால் விலை ஏறும். தங்கத்தை இதில் வகைப் படுத்த முடியாது. தங்கத்தின் நுகர்வு பெரும்பாலும் முதலீடு தொடர்புடையதாக இருப்பதும், பணத்துக்கு மாற்றாக இருப்பதும், அதை ஒரு தனித்துவமிக்க ஒன்றாக ஆக்குகிறது. இந்தியாவிலோ தங்கம் உணர்வோடு பிணைந்தது. இரண்டாவது, தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis). நிரல் படம் (Charts) மற்றும் முந்தைய தரவுகளைக் கொண்டு மென்பொருள் உதவியுடன் எதிர்கால விலைப் போக்கைக் (Price Trend) கணிப்பது. 

அப்படி ஆராய்ந்து 1 அவுன்ஸ் (தோராயமாக 31 கிராம்) தங்கம், 500 டாலரைத் தாண்டும் என்று பலர் முன்கூறுதல் (Forecast) செய்தார்கள். ஜிம் ரோஜர்ஸ் (முதலீட்டாளர் மற்றும் Hot Commodities, Adventure Capitalist போன்ற புத்தகங்களை எழுதியவர்) போன்றவர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட பண்டகச் சந்தை ஏறுமுகத்தை கணித்து முன்கூறியிருந்தார்கள். அதேபோல பல பண்டங்களும் (தாமிரம், கச்சா எண்ணெய் மற்றும் கோதுமை, சோளம் போன்ற தானியங்கள்) விலை ஏறிக்கொண்டிருந்தன. முதன் முதலாக புதிய விலை உயர்வுகளைப் பார்த்தோம். நாள்தோறும். சுத்தமான காளையின் ஆதிக்கம். 

2005 ல் தங்கம் ஒரு அவுன்ஸ் 500 டாலரைத் தாண்டியது. 2007 ல் 800 டாலரைத் தாண்டியது. 2008 ல் 1000 டாலர். 28 வருடங்களுக்கு முந்தைய உச்ச விலையான 850௦ டாலரை அப்போதுதான் தாண்டியது. 

Year
Yearly
High 
Yearly
Low  

 Year
Yearly
High 
Yearly
Low 
1972
$70.00
$44.00
1990
$423.75
$345.85
1973
$126.00
$64.00
1991
$403.00
$344.30
1974
$195.00
$117.00
1992
$359.60
$330.20
1975
$185.00
$135.00
1993
$406.70
$326.10
1976
$142.00
$102.00
1994
$397.50
$369.65
1977
$168.00
$127.00
1995
$396.95
$372.40
1978
$243.65
$165.70
1996
$416.25
$367.40
1979
$524.00
$216.55
1997
$367.80
$283.00
1980
$850.00
$474.00
1998
$314.60
$273.40
1981
$599.25
$391.25
1999
$323.50
$252.80
1982
$488.50
$296.75
2000
$325.50
$264.10
1983
$511.50
$374.25
2001
$291.45
$256.65
1984
$406.85
$303.25
2002
$342.75
$277.75
1985
$340.90
$284.25
2003
$417.25
$319.90
1986
$442.75
$326.00
2004
$454.20
$375.00
1987
$502.75
$390.00
2005
$536.50
$411.10
1988
$485.30
$389.05
2006
$725.00
$524.75
1989
$417.15
$358.50
2007
$841.10
$608.40
2008
$1,011.25
$712.50


2009
$1,212.50
$810.00
2010
$1,421.00
$1,058.00




1978 வரை படிப்படியாக ஏறிக் கொண்டிருந்த தங்க விலை முதன்முறையாக 1979 ல் 500 டாலரைத் தாண்டியது. 1980 ல் 850 டாலரை தாண்டிய தங்கம் 2008 ல் தான் அதை மீண்டும் எட்டிப் பிடிக்கிறது. இடைப்பட்ட 27 வருடங்களின் உச்சபட்ச விலை சராசரி 442.12 டாலர்தான்.
தங்கம் விலையேற தற்போதைய முக்கியக் காரணம் உலகப் பொருளாதாரம் பற்றிய பொதுவான அச்ச உணர்வே. அமெரிக்காவின் பொருளாதார சரிவு (Recession) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் (கிரீஸ், இத்தாலி போன்ற) பொருளாதாரப் பிரச்சினைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பி உள்ளன. இது போன்ற நிலையற்ற தன்மை நிலவும்போது பெரும் பணம் தொழில் முதலீடுகளில் (பங்குச் சந்தை) இருந்து எடுக்கப்பட்டு தங்கத்தில் போடப்படும். தங்கமே அவர்கள் முன் உள்ள ஒரே மாற்று. எச்சரிக்கையுணர்வே இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஆகும். சரியான திசை புலப்படும் வரை இது தொடரும். 

இப்போது முதலீடு செய்யலாமா?
இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவொரு முதலீட்டாளரும் தங்கத்தை பொதுவாக நகைகளாக வைத்திருப்பார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு பழக்கம் இல்லை. அதனால் அவர்களது மொத்த சொத்தில் தங்கத்தின் பங்கு கணிசமாக இருக்கும். சொத்தோ வேறு முதலீடுகளோ இல்லாத குடும்பத்தில் கூட நகைகளாக சிறிது தங்கம் இருக்கும். அதனால் மொத்தமாக முதலீடு (Bulk Investment) செய்பவர்களுக்கு இது சரியான நேரமல்ல. எந்த ஒரு பண்டமும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்காது. மொத்த முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மட்டும் சீரான இடைவெளியில் (மாதா மாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போல) தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். அதையும் நகைகளாக வாங்காமல் தங்க சந்தைப் பரிவர்த்தனை நிதியில் (Gold Exchange Traded Fund) முதலீடு செய்வது நல்லது.ஏனென்றால் அடுத்த பத்திருபது வருடங்களுக்கு தங்க முதலீடு என்ன விளைச்சலைக் கொடுக்கும் என்பதே கேள்வி. முந்தைய வரலாறு கண்முன்னே உள்ளது.

Thursday, August 18, 2011

நிதித் திட்டமிடுதல் (Financial Planning) - சில குறிப்புகள்

நிதித் திட்டமிடுதல் (Financial Planning) பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தது தான். நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், எதிர்பார் வாடிக்கையாளருக்கும் (Prospects) இது உதவும். நிதித் திட்டமிடுதல் பற்றிய தகவல்களையும், சந்தேகங்களையும் களைய இக்கட்டுரை உதவக்கூடும். தற்போதைய நிலவரத்தைக் கணக்கில் கொண்டே இதை எழுதுகிறேன்.

நிதித் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்கள் நிதியைச் சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் எதிர்கால குறிக்கோள்களை அடையும் முறைமையே நிதித் திட்டமிடுதல் என்பது. குறிக்கோள்கள் நிதி சம்பந்தப் பட்டவை மட்டுமே. பண ரீதியாக நீங்கள் எங்கே நிற்கிறீர்கள், எங்கே போக விரும்புகிறீர்கள் என்பதோடு அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.


நிதித் திட்டத்தில் என்ன இருக்கும்?

பாதுகாப்புத் திட்டம் (Protection Planning)
வாடிக்கையாளரின் ஆயுள் மற்றும் அவரது சொத்துக்களின் இழப்பால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் திட்டம். நிதித் திட்டத்தில் முதலிடம் இருப்பதைப் பாதுகாப்பது தான். வாடிக்கையாளரின் ஆயுள் காப்பீடு போதுமானதா என்பது  கணிக்கப்படும். இதைப் பற்றிய எனது முந்தைய பதிவைப் பார்க்கவும்.
http://panavivakaram.blogspot.com/2011_06_01_archive.html
மேலும் மருத்துவக் காப்பீடு, வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருட்கள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, கடன் காப்பீடு போன்றவையும் திட்டமிடப்படும். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில் நிபுணர்களுக்கும், நிறுவனத்தின் இயக்குனர் போன்றவர்களுக்கும் பொறுப்புக் காப்பீடு (Liability Insurance) எடுப்பதும் முக்கியம். திட்டமிடுபவர் அனைத்தையும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கணக்கிடுவார்.


முதலீட்டுத் திட்டம் (Investment Planning)
வாடிக்கையாளரின் முந்தைய முதலீட்டைச் சரிபார்த்து, அது அவருடைய குறிக்கோள்களுக்கு இட்டுச் செல்லுமா என்பதின் அடிப்படையில் மாற்றங்களை செய்வதோடு புதிய முதலீடுகளையும் திட்டமிடுவது.

வருமானவரி திட்டம் (Tax Planning)
சரியான முதலீடுகள் வழியாக வருமான வரிச் சுமையைக் குறைப்பதற்கான திட்டம்.

ஓய்வுத் திட்டம் (Retirement Planning)
ஓய்வு பெற விரும்பும் வயதின் அடிப்படையில், மீதமுள்ள ஓய்வு காலத்துக்கான நிதியைக் கணக்கிட்டு, அதற்கான முதலீட்டைத் திட்டமிடுதல்.
மகன் மற்றும் மகளுக்கான எதிர்கால குறிகோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

குழந்தைகள் எதிர்காலத் திட்டம்
குழந்தைகளுக்கான எதிர்காலக் குறிக்கோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

உடைமைத் திட்டம் (Estate Planning)
வாடிக்கையாளர்கள் தங்களது சொத்துக்களை யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று திட்டமிட்டு அதை சட்டப்பூர்வமாக பதிவு (உயில் போன்றவை) செய்வதே உடைமைத் திட்டமிடுதலாகும். இது மிகவும் முக்கியம். சரியாகச் செய்யப்படாவிட்டால் வாரிசுகளுக்கிடையில் பிரச்சினையில் பொய் முடியும். விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் இக்காலத்தில் சிறு சொத்துடையவர்களும் இதில் கவனம் செலுத்துவது நல்லது. இது ஒரு வழக்கறிஞரின் துணை கொண்டே செய்யப்படும்.

பயன்கள்
  • நீங்கள் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகளுக்கு ஒரு திசையைக் காட்டவும் அர்த்தம் கொடுக்கவும் உதவுகிறது.
  • உங்களுடைய ஒவ்வொரு நிதி சார் முடிவுகளும் பிற பண விவகாரங்களை எப்படி பாதிக்கும் என்று அறிவது. (30 வயதில் நீங்கள் வாங்கும் கார் உங்களுடைய ஓய்வூதிய நிதியை எவ்வளவு குறைக்கும்?)
  • ஒவ்வொரு பண முடிவும் ஒரு முழுமையான சித்திரத்தின் ஒரு பகுதி என்று பார்க்க முடிவது.
  • வாழ்க்கை சூழலின் மாற்றத்திற்கு ஏற்ப நிதி விசயங்களை சரியாகக் கையாண்டு குறிக்கோள்களில் இருந்து மாறாமல் செல்வது. (புதிய வேலை, அதிக சம்பளம், புதிதாகத் தொழில் தொடங்குதல், சீக்கிரமே ஓய்வு கொள்ள விரும்புதல் போன்ற பல)
நீங்களே செய்து கொள்ளலாமா?
தாராளமாகச் செய்யலாம். நீங்களே புத்தகங்கள் வாங்கிப் படிக்கலாம். சில மென்பொருட்களின் துணை கொண்டு செய்யலாம். சில உயர் மதிப்பு தனிநபர்களை (High Netwoth Individuals - HNI) சந்திக்கையில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு இதையெல்லாம் தாங்களே செய்யக்கூடியவர்கள் என்று சொல்வார்கள். அப்படி செய்தும் இருப்பார்கள். அவர்களுடைய முதலீடுகளைப் பார்த்த பின்பு கொடுக்கும் விளக்கமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்களால் எல்லா நிதிச் சேவை பண்டங்களின் நுணுக்கங்களையும் ஆராயும் அளவுக்கு அதில் நிபுணத்துவமோ, ஆராய நேரமோ இருக்காது. அது அவர்கள் வேலையும் அல்ல. சிலர் தங்கள் நிதி பண விவகாரங்களை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டார்கள். தங்கள் மனைவியிடம் கூட. ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. தனக்கு ஒரு நிபுணரின் உதவி தேவையா என்று.

நிதித் திட்டமிடுபவர் (Financial Planner) என்பவர் யார்?
நிதித் திட்டமிடும் முறைமை வழியாக உங்கள் எதிர்காலக் குறிக்கோள்களை அடைய உதவுபவர். பெரிய சித்திரத்தைக் காண்பவர். ஒவ்வொரு சிறிய பண விவகாரமும் மொத்த நிதி நிலைமையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடத் தெரிந்தவர்.  மொத்தத்தில் தனிநபர் நிதி சார்ந்த முழுமையான பார்வையைக் கொண்டவர்.

நிதித் திட்டமிடும் சேவையைத்தான் பெறுகிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
தற்போதைய நிலவரப்படி, நிதித் திட்டமிடுதல் தர வாரியம் (FPSB - Financial Planning Standards Board of India) அளிக்கும் சான்றிதழ் பெற்ற நிதித் திட்டமிடுபவர்களையே (Certified Financial Planners) இந்த சேவையைக் கொடுக்கும் முழுமையான தகுதி கொண்டவர்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் இதைச் செய்ய இவர்கள் தான் தகுதியானவர்கள் என்று அரசாங்க வரையறை எதுவும் இல்லை. 
சான்றிதழ் பெற்றவர்களை இந்த இணைய தளத்தில் காணலாம். http://www.fpsbindia.org/

நிதித் திட்டமிடல் முறைமை (Financial Planning Process)

1. வாடிக்கையாளர் - திட்டமிடுபவர் உறவை வரையறுத்தல். முதல் சந்திப்பில் வாடிக்கையாளர் தங்களது எதிர்பார்ப்பையும் திட்டமிடுபவரிடம் இருந்து அவருக்குக் கிடைக்கும் சேவைகளைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொள்வது. இது நீண்ட காலத் தொடர்பு என்பதால் பரஸ்பரப் புரிதலுக்கு ஒரு தொடக்கமாக அமையும்.

2. வாடிக்கையாளர் தகவல் சேகரிப்பு. வாடிக்கையாளரின் நிதித் தகவல்களை (வருமானம், சொத்து, கடன், சேமிப்பு, முதலீடு, காப்பீடு) திட்டமிடுபர் தெரிந்து கொள்வது. மேலும் அவரது எதிர்கால குறிக்கோள்களையும் (குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணம், புதிய தொழில் தொடங்குதல்) திட்டவட்டமான கால அட்டவணையில் வரிசைப் படுத்துதல். தேவையான ஆவணங்களையும் பெற்றுக்கொள்வது.

3. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் எங்கே நிற்கிறார் என்று தெரிந்துகொள்வது. சொத்துக்கள், கடன்கள், பணவரத்து முதலிய தகவல்கள் அடிப்படையில் வாடிக்கையாளரின் நிகர மதிப்பு (Net Worth) கணக்கிடப்படும். அவருடைய மாதாந்திர வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் நிகர பண வரத்து (Net Cash Flow) என்னவென்று தெரியவரும். எதிர்கால குறிக்கோள்களை சந்திக்க இது மிக முக்கியம். 

4. மேற்கண்ட காரியங்களின் பின் ஒரு திட்டத்தை வகுப்பது. நிதித் திட்டமிடுபவர் தகவல்களை ஆராய்ந்து வாடிக்கையாளர் நிதி நிலையை தீர்மானித்து விட்டு, குறிக்கோள்களை எதிர்காலத்தில் அடையக் கூடிய சாத்தியமுள்ள திட்டங்களை வகுப்பார். அதை வாடிக்கையாளரோடு அமர்ந்து பேசி மேலும் சரி செய்து, ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன் வைப்பார். 

5. திட்டத்தை செயல்படுத்துவது (Implementation). வரையப்  பட்ட திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது. எடுத்துக் காட்டாக, ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு, 17 வருடங்கள் கழித்து 25 லட்ச ருபாய் தேவை என்ற குறிக்கோள் வைத்திருக்கிறார். அதற்கு அவர் மாதம் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்றும் அது எவ்வளவு விளைச்சலைத் (Returns) தரும் சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் திட்டத்தில் இருக்கும். திட்டப்படி மாதம் ..... தொகையை அவர் சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) போட வேண்டும்.ஆனால் அவர் முன் நூற்றுக்கணக்கான தேர்வுகள் உள்ளன. இதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதே பெரிய வேலை. அதை வாடிக்கையாளரே செய்ய நிறைய பொறுமையும் நேரமும் ஆகும். அப்படியே இருந்தாலும் பொருளறிவு (Product Knowledge) இருக்கிறதா என்பது முக்கியம். அதனால் திட்டத்தைச் செயல் படுத்துவதிலும் திட்டமிடுபரின் பணியை கோருவது பொருத்தமாக இருக்கும்.

6. மேற்பார்வை பார்ப்பது. திட்டம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருப்பது. வாடிக்கையாளரின் நிதி நிலையைப் போலவே. அதனால் போட்ட பாதையிலேயே போய்க் கொண்டிருக்க முடியாது. அதனால் வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசி வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மறு பரிசீலனை (Review) செய்ய வேண்டும். திட்டத்தின் போக்கை திட்டமிடுபவரும், தனது நிதி நிலையில் ஏற்படும் மாற்றத்தை (சம்பள உயர்வு, வேறு நிறுவனத்துக்கு மாறுதல், வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது போன்றவை) வாடிக்கையாளரும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது முக்கியம். மாறிக்கொண்டேயிருக்கும் நிதி நிலைக்கு ஏற்ப திட்டமும் மாறிக்கொண்டேயிருக்கும்.

கட்டணம் எவ்வளவு?
முக்கியமானது. திட்டமிடுபவருக்கு மட்டுமல்ல வாடிக்கையாளருக்கும்தான். இலவசமாக எந்த பணியையும் யாரும் செய்ய மாட்டார்கள். இதை உங்களுக்கு இலவசமாக யாரும் செய்தால் அவருக்கு இதனால் என்ன ஆதாயம் என்று கேளுங்கள்? பதிலை வைத்தே அவரின் நேர்மையை தெரிந்து கொள்ளலாம். உண்மையில் கட்டணத்திற்கு ஒரு வரையறை கிடயாது. வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசித்தான் ஒரு கட்டணத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் தேவையும், பணியும் மாறுவதால் பொதுவான கட்டணம் சாத்தியம் இல்லை. சந்தையில் எப்படி கட்டணம் இருக்கிறது என்று முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html
அதில் பார்க்கலாம். 
நிதித் திட்டமிடுபவருக்கு இரு வழியில் வருமானம் வரலாம். ஒன்று, கட்டணமாக கோருவது. இரண்டாவது, திட்டத்தைச் செயல்படுத்தும் போது கிடைக்கும் முகவர் தரகு (Agency Commission). திட்டம் அளிக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர் அதைத் தன் மூலமாக செயல் படுத்துவதை உறுதிப்படுத்த முடியாது. செயல்படுத்துவார்களா என்பதையே உறுதிப் படுத்த முடியாது. அதனால் திட்டமிடுபவர் தான் செய்த பணிக்கான கட்டணத்தை கோரிப் பெறுவதே நடக்கிறது. முதல் சந்திப்பிலேயே அவர் குறைந்த பட்சம் எவ்வளவு என்றும் சொல்லிவிட வேண்டும். பொதுவாக இவ்வளவிலிருந்து அவ்வளவு வரைக்கும் என்று சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் முதல் சந்திப்பிலேயே   வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணியின் ஆழ அகலம் திட்டமிடுபவருக்குத் தெரியாது. அதே நேரம் வாடிக்கையாளருக்கோ கட்டணம் எவ்வளவு என்றே தெரியாமல் தனது முக்கியத் தகவல்களைப் பகிரவும் முடியாது. அதனால் திட்டமிடுபவர் தனது கட்டண வரம்பைத் தெரிவித்து விடலாம் (எடுத்துக்காட்டாக, ரூ.5000 லிருந்து  ரூ.25000 வரை என்று). அது சரியென்றால் வாடிக்கையாளர் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். இதுவே தற்போதைய நடைமுறை. 

Sunday, August 7, 2011

எல்லா விலங்குகளும் சமமானவை

நான் முன்பு வேலை செய்த வங்கி சார நிதி நிறுவனத்தில் எப்போதும் பெருமையாக இப்படிச் சொல்வார்கள். LIC க்கு அடுத்து அதிக முகவர்களை உடையது நமது நிறுவனம் தான் என்று. நான் அதே நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சியில் இருந்த போது கரூர் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் எங்களது முகவர் இருந்தார். அவரை ஊக்குவிக்க நான் அங்கே செல்வதுண்டு. அவர் LIC முகவர் என்பதோடு தபால் துறை தொடர் வைப்பு நிதி (Recurring  Deposit) யும் செய்து கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் அவர் சொல்வதை முழுதும் நம்பிச் செய்வார்கள்.அவர் நீண்ட காலமாக அவர்களுடனேயே வாழ்ந்துவருகிறார் என்பதற்கும் மேலாக, LIC மற்றும் தபால் துறை தொடர்பானவர் என்பது அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். LIC வசீகரமானது இல்லையென்றாலும் பிரமாண்டமானது.
பி வி சுப்பிரமணியம் ஒரு கணக்காளர் (Chartered Accountant) என்பதோடு நிதித் துறைப் பயிற்சியாளரும் கூட. www.subramoney.com என்ற தளத்தில் நிறைய எழுதுகிறார். அவர் எழுதிய கற்பனையான ஒரு உரையாடல்.

LIC : வணக்கம் சார், அரசாங்கத்தோட நான்சென்ஸ் லிமிடெட்டின் முதல் பொது பங்கு வெளியீட்டுக்கான (IPO) ரூ. 8000 கோடிக்கு காசோலை இங்கிருக்கு. இந்த வெளியீடு நல்லாப் போகும்னு நம்புறேன்.

நிதி அமைச்சகம் : ஆமாம், பங்கு வெளியீடே பத்தாயிரம் கோடிக்குத் தானே. அதனாலே நல்லாப் போகும்.

LIC: சார், போட்டித் தளம் சமமா இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிற IRDA வோட வாழுறது ரொம்பக் கஷ்டமா இருக்கு.

நிதி அமைச்சகம் : என்ன சம தளத்தைப் பத்திக் கவலைப் படுற? செலவுகளா?

LIC: இல்ல சார். மார்டாலிட்டி தொகையையும்*(Mortality rate) ரைடர் தொகையையும்* (Rider) ஏற்றி செலவையெல்லாம் சரிக்கட்டிட்டோம்.

நிதி அமைச்சகம் : ஓஹோ. அப்ப வேறேன்னத்தப் பத்திப் பேசுறீங்க? 

LIC: LIC பாலிசிக்கு அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்கிற சரத்து ரொம்ப அநீதியானதுன்னு IRDA அரசு கிட்ட எடுத்துச் சொல்லுது. ஏன்னா, மத்த போட்டிக்காரங்களுக்கு அந்த வாய்ப்பு இல்ல, முடியவும் முடியாது.

நிதி அமைச்சகம் : மக்களெல்லாம் SBI க்கு அரசு உத்தரவாதம் இருக்குன்னு நம்புறாங்களா?

LIC: சரியாத் தெரியல சார். இருக்கலாம். அதுனாலதான் அவங்க நிறைய பாலிசிகள வித்துருக்காங்க போலருக்கு.

நிதி அமைச்சகம் : இப்ப நாங்க என்ன செய்யணும்னு விரும்புறீங்க?

LIC: பத்திரிக்கைகளுக்கு மட்டும் அந்த உத்தரவாதம் இன்னும் இருக்குன்னு சொல்லீருங்க சார்.

நிதி அமைச்சகம் : அத நாங்க செய்ய முடியும். ஆனா ஒரு விசயம் தெளிவு படுத்துங்க. இப்ப நீங்க நெறைய ULIP * (Unit Linked Insurance Plan) விக்கிறீங்க. ULIP க்கு உத்தரவாதம் கொடுக்க முடியாதுல்ல.

LIC: உண்மைதான். உங்களுக்கும் எனக்கும் ULIP க்கு உத்தரவாதம் கொடுக்க முடியாதுன்னு தெரியும். ஆனா, பொதுமக்களுக்கு தெரியாதுல்ல.

நிதி அமைச்சகம் : ஆனாலும் இது எப்படி உதவும்? எனக்கு புரியல.

LIC: நம்ம ஏஜெண்டுக என்ன சொல்வாங்கன்னா, சம் அஷ்யூர்டு (Sum Assured - ஆயுள் காப்பீட்டுத் தொகை) ரூ.10 லட்சம், வருச ப்ரீமியம் ரூ.25000௦ மூனு வருசத்துக்கு கட்டுனா ரூ.10 லட்சம் கையில வரும்னு.

நிதி அமைச்சகம் : மக்கள் நம்புவாங்களா?

LIC: நம்ம ஏஜெண்டுகள் நல்லா பயிற்சி எடுத்துருக்காங்க. சார் பாருங்க, சம் அஷ்யூர்டு ரூ.10 லட்சம், அப்படின்னா LIC பத்து லட்சம் கொடுக்கும்னு விளக்குவாங்க. அது போக நீங்க கொடுத்த அரசாங்க உத்தரவாதம் பற்றிய பத்திரிகை செய்தியையும் சேர்த்துக்குவோம்.

நிதி அமைச்சகம் : அற்புதம். நீங்க நெறைய எண்டோமென்ட் திட்டங்களையும் (Endowment Plan) விற்பனை செய்வீங்கன்னு நம்புறேன். அடுத்த வருச கடன் திட்டம் என் மேசையில இருக்கு. எப்படியும் சந்தையில ரூ.200000 கோடியாவது திரட்ட வேண்டியிருக்கும் ( கோயில் பூட்டுகளைத் திறந்து பணத்தையெல்லாம் அரசாங்கமே வைத்துக் கொள்ளலாம்னு சுப்ரீம் கோர்ட் சொல்லாவிட்டால்). உங்கள் உதவி தேவைப்படும்.

LIC: கண்டிப்பா சார். நாங்க செய்வோம். எண்டோமென்ட் 30% கமிசன் திட்டம் தான். அதனால விக்கிறது சுலபம். சார் அந்த IRDA வோட சமமான போட்டி பற்றி? 

நிதி அமைச்சகம் : 'வலுவான ஆளோட பேச்சைத் தான் ஒழுங்காணையம் கேட்கும்', என்ற பழைய பழமொழியை மறந்துராதீங்க. அதனால அது தொடரும்.

LIC: மத்த காப்பீட்டு நிறுவனங்களும் இதே வசதியை அரசாங்கத்திடம் கேட்டால்?

நிதி அமைச்சகம் : நாங்களும் அத யோசனை பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். இப்படித்தான் ஒரு தனியார் நிறுவனத்திடம் இத தெரிவிச்சப்ப அவன் எங்க கணக்க (Balance Sheet ) கேட்கிறான். என்ன அராஜகம்!

LIC: அப்புறம் என்னாச்சு சார்?

நிதி அமைச்சகம் : அவங்க எங்க கணக்கிலிருந்து LIC யோட சந்தை மதிப்பை கழிச்சுப் பார்த்தப்ப எங்க நிகர மதிப்பு தலைகீழா ஆயிருச்சு.

LIC: அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க சார்?

நிதி அமைச்சகம் : ' LIC அரசாங்க உத்தரவாதத்தைக் கேட்கணுமா, இல்ல அரசாங்கம் LIC உத்தரவாதத்தைக் கேட்கணுமா?' ன்னு கேட்டாங்க. ரொம்பக் குரூரம். மலிவான ஆட்கள். அவங்க லைசென்சைப் புதிப்பிக்கனுமான்னு யோசிக்கிறேன்.

'எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால் சில விலங்குகள் மற்றவற்றை விட அதிக சமமானவை.' - ஜார்ஜ் ஆர்வெல்

*Mortality rate - இறப்பு இழப்பீட்டுக்கான கட்டணம் 
*Rider - மேலதிக கட்டணம் 
*ULIP - கட்டும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் ஆயுள் காப்பீட்டிற்கும், பிறகுள்ளது பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும். இழப்பீடாக ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சந்தை மதிப்புத் தொகையும் கொடுக்கப்படும்.