Tuesday, March 29, 2011

பட்ஜெட்டும் வரிவிலக்குகளும்

2011 நிதியறிக்கை வெளிவந்தபோது அதிலிருந்து முக்கியமான விடயங்களை வாடிக்கையாளரர்களோடு பகிர விரும்பி அபுவிடம் பேசினேன். பிறகு அனைத்து ஊடகங்களும் அதில் பிரபலமான விடயங்களை, முக்கியமானவை அல்ல, வாசகர்களுக்கு தருவதில் துடிப்புடன் செயல்படுவதால் அதைச் செய்யவில்லை. இதில் ஒன்று மற்றொன்றோடு பெரிதாக வேறுபடுவதில்லை. வெகு சிலரே ஆழமாகச் சென்று பார்க்கிறார்கள்.

துக்ளக்கின் கட்டுரைகளில் S. குருமூர்த்தியின் நிதிப் பார்வை மிக ஆழமானது. அதிலிருந்து சில.

  • 2008 ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், அவசர அவசரமாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், பெரிய அளவில் பெரிய கம்பெனிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வரிவிலக்கு அறிவித்தார். அது அன்றைய தேவை. அதன் காரணமாக, 2007 - 2008 ல் ரூ. 1.24 லட்சம் கோடியாக இருந்த எக்சைஸ் வருமானம், ஆண்டுக்காண்டு சாதாரணமாக உயருவதற்கு மாறாக, 2008 - 2009 ல் 1.04 லட்சம் கோடியாகக் குறைந்தது.
  • வரி வருமானம் என்பது, வரிகளை உயர்த்தாமலேயே, பொது உற்பத்தி (GDP) உயர்வதன் காரணமாகவும்,விலைவாசி உயர்வதன் காரணமாகவும், தானே அதிகமாகும். உதாரணமாக, சென்ற ஆண்டு சோப் விலை ரூ. 10 என்று வைத்துக்கொள்வோம். இந்த ஆண்டு அதன் விலை ரூ. 12 என்று உயர்ந்தால், சோப்பின் மேல் 10 சதவிகிதம் வரி என்கிற அடிப்படையில், சென்ற ஆண்டு வரி ரூ. 1, என்பது இந்த ஆண்டு, ரூ. 1.20 என்று தானாகவே உயரும். அதுபோல சோப் உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்தால், வரி அதன் அடிப்படையில் மேலும் பத்து சதவிகிதம் உயரும். ஆகவே, சோப்பின் மீது வரியை உயர்த்தாமலேயே, சோப்பின் மூலமாகக் கிடைக்கும் வரி 20 சதவிகிதம் உயரும்.
  • இப்படி 2008 - 2009 ல் வரியைக் குறைத்ததால், எக்சைஸ், சுங்க வருமானம், மேலே கூறியபடி குறைந்தது. அடுத்த 2009 - 2010 ஆம் ஆண்டிலும், எக்சைஸ் வருமானம் ரூ. 1.04 லட்சம் கோடி என்றும், சுங்க வரி ரூ.0.83 லட்சம் கோடி என்றும் குறைந்தே இருந்தன. அதாவது 2007 - 2008 லிருந்து, 2009 - 2010 வரை, எக்சைஸ் மற்றும் சுங்க வரி வருமானம் உயரவில்லை. மாறாகக் குறைந்தன. 2007 - 2008 ல் ரூ. 2.28 கோடியாக இருந்த வருமானம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 - 2010 ல் ரூ. 1.87 லட்சம் கோடியாகக் குறைந்தே இருந்தது.
  • 2007 - 2008 ல் ரூ. 48.86 லட்சம் கோடி என்றிருந்த நாட்டின் உற்பத்தி (GDP), 2009 - 2010 ல் ரூ. 65.50 லட்சம் கோடி என்று 34 சதவிகிதம் உயர்ந்தது. அப்படி விலைவாசியும் உற்பத்தியும் சேர்ந்து 34 சதவிகிதம் உயர்ந்தாலும், வரிகள் உயர்வதற்கு மாறாக 18 சதவிகிதம் குறைந்தது.
  • இந்தக் கணக்குப் படி, வரிவிலக்கின் மூலமாக பெரிய கம்பெனிகளுக்கும் பெரிய வியாபாரிகளுக்கும் 2009 - 2010 ல் ரூ. 1.28 லட்சம் கோடி வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
  • கம்பெனிகளின் லாபம் 2008 - 2009 ல் குறைந்தது உண்மை. ஆனால், 2009 - 2010 ல் லாபம் அதிரடியாக உயர்ந்தது. 2006 - 2007 ல் கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகளின் லாபம் ரூ. 7.12 லட்சம் கோடியாக இருந்தது. 2008 - 2009 ல் இது ரூ. 6.68 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆனால் 2009 - 2010 ல் ரூ. 8.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது பொருளாதார நெருக்கடிக்கும் முன்னால் கம்பெனிகள் ஈட்டிய லாபத்தை விட 16 சதவிகிதம் அதிகம். ஆகவே, கம்பெனிகள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரிவிலக்கு 2009 - 2010 லும் தொடர எந்தவிதமான நியாயமும் இல்லை. அது 2009 - 2010 ல் மட்டுமல்லாமல், தற்போது சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் பட்ஜெட்டிலும் (2010 - 2011), இந்த வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருப்பது நியாயமே இல்லை.
  • அப்படி, 2008 - 2009 ல், உற்பத்தியைக் குறைக்கக் கூடாது, நஷ்டம் அடையக்கூடாது, அதனால் நாட்டின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக அளிக்கப் பட்ட வரிவிலக்கை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2010 -2011) நியாயமாக விலக்கியிருந்தால், எவ்வளவு வரி வருமானம் அடுத்த ஆண்டு கூடும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா? ரூ. 1 லட்சம் கோடி.

Friday, March 25, 2011

ஜப்பானின் இழப்பு எவ்வளவு?

யற்கைப் பேரிடர் இழப்பைக் காப்பீடு செய்வது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஜப்பானின் இழப்பு தோராயமாக 235 பில்லியன் டாலர்கள் ( 1 பில்லியன் டாலர் தோராயமாக ருபாய் 4500 கோடி ) என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. அதன் மொத்த தேச உற்பத்தியில் (GDP) 4 சதவிகிதம். இதில் எவ்வளவு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது?

உலகின் மிகப்பெரிய மறுகாப்பீட்டு (Re-insurer) நிறுவனங்களில் ஒன்றான பெர்க்க்ஷயர் (Berkshire Hathaway Reinsurance Group) இன் முதன்மை செயல் அலுவலரான (CEO) அஜித் ஜெயின் கூற்றுப் படி, " இது மிகப்பெரிய பொருளாதார இழப்பாக இருக்கும். ஜப்பானின் காப்பீட்டு நிறுவனங்கள் பூகம்ப இழப்புகள் நிமித்தம் படுகவனமாக இருப்பதால் காப்புறுதித் தொகை அங்கு மிக அதிகம். அதனால் காப்பீட்டு விகிதமும் குறைவு. 1995 இல் கோபே (KOBE) யில் ஏற்பட்ட பூகம்ப இழப்பான் 100 பில்லியன் டாலரில் 3 பில்லியன் டாலர் அளவுக்கே காப்பீடு இருந்தது. அதன் பின் பூகம்ப காப்பீடு அதிகரித்தது. அதிக அளவிலான வீட்டுடமையாளர் இழப்பு ஜப்பான் அரசு நிதியைச் சார்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் வர்த்தகச் செயல்பாடுகள் பெரிதாக இல்லை. லண்டனில் பேசினீர்கள் என்றால் அவர்கள் சர்வதேச மறுகாப்பீட்டு நிறுவனங்களின் இழப்பு 20 பில்லியன் டாலருக்கு கீழ்தான் இருக்கும் என்பார்கள். அமெரிக்காவிலோ (US) 50 பில்லியன் டாலர் அளவு இருக்கலாம் என்கிறார்கள். இதில் மிகவும் முக்கியமானது தொழில் தடங்கல் (Business Interruption) என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஜப்பானிலிருந்து உதிரிப் பாகங்களை வாங்கும் ஒரு அமெரிக்க உற்பத்தியாளராக இருந்தால் உங்கள் விநியோகச் சங்கிலி (supply chain) பாதிக்கப்படலாம். உங்கள் காப்புறுதி ஒப்பந்தம் (policy) எவ்வளவு விரிவானது என்பதைப் பொறுத்து உங்கள் இழப்பை காப்பீட்டு நிறுவனத்திடம் தள்ளி விடலாம்."

மேலும் தொழில் தடங்கல் இழப்பைக் கோருவதில் உள்ள சிக்கல், அந்த இழப்பிற்குக் காரணம் (Proximate cause) பூகம்பமா, சுனாமியா அல்லது அணுக் கதிரியக்கமா என்று நிறுவுவதில் இருக்கிறது என்கிறார். இது நியாயமான இழப்புக் கோரிக்கையா (Claim), இல்லையா என்ற விவாதத்தை தூண்டும் அளவிற்கு இரட்டைத் தன்மையுள்ள சொற்கள் காப்புறுதி ஒப்பந்தத்தில் விரவி இருக்கும் என்கிறார். வக்கீல்கள் பணக்காரர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட படத்தில் 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி அழிவு இடம்பெறவில்லை.
250000 கும் மேற்பட்டோர் இறந்த அந்தப் பேரழிவின் தற்போதைய பொருள் மதிப்பு 15 பில்லியன் டாலர் என்பதால் என்கிறது தி எகனாமிஸ்ட்.

Wednesday, March 16, 2011

ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்

முதலீடு விசயமாகப் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது பலர் பரஸ்பர நிதி மற்றும் காப்பீடு விற்கும் இணையதளங்களைப் பற்றி குறிப்பிடுவார்கள். 'ஒரு கோடிக்கு காப்பீடு செய்யுங்கள் மிகக் குறைந்த பிரீமியத்தில்', என்று விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நானும் இது போன்ற பல இணையங்களில் மேய்ந்திருக்கிறேன். இந்த இணையங்களைப் பற்றி சமீபத்தில் மணி லைப் (Moneylife) பத்திரிகையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. அதிலிருந்து முக்கியமானது என்று நான் கருதுபவற்றை இங்கே தருகிறேன்.

பொருட்களை இணையத்தில் வாங்குவது போலவே காப்பீடு, கடன்கள் மற்றும் பிற நிதி சேவைகளையும் இணையம் மூலம் வாங்குவது அதிகரித்துள்ளது. எளிதாக ஒப்பிடலாம், தேவையானபோது வாங்கலாம் என்று சுலபமாகத் தோன்றும் இதற்காகப் பல இணைய தளங்கள் உள்ளன.

1. நீங்கள் அவற்றை பயன்படுத்தலாமா?
2. அவற்றால் தவறான முடிவெடுக்கும் வாய்ப்புள்ளதா?
3. நீங்கள் ஒவ்வொரு விசயத்துக்கும் (பரஸ்பர நிதி, காப்பீடு முதலியவை ) ஒவ்வொரு இணையதளத்துக்குச் செல்ல வேண்டுமா அல்லது அனைத்தையும் ஒரே இடத்தில் அளிக்கும் தளம் உள்ளதா?

நாங்கள் அனைத்து இணையதளங்களையும், காப்பீடு, முதலீடு மற்றும் கடன் அட்டைகள் போன்றவை விற்கப்படுபவை, வாங்கப்படுபவையல்ல என்பதை மனதில் கொண்டே ஆய்வு செய்தோம். நிதிப் பண்டங்களின் பன்முகத்தன்மையும் கணமும் சிறந்த நிதிச் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதைச் சவாலானதாக்குகின்றன.

www.policybazaar.com, www.paisawaisa.com போன்றவை காப்பீடு, கடன் சேவைகள் பற்றி மட்டுமே ஒப்பீடு செய்கின்றன. www.rupeetalk.com, www.apnapaisa.com, www.itrust.in போன்றவை காப்பீடு, கடன்கள், கடன் அட்டைகள் மற்றும் வங்கி சேவைகள் போன்றவற்றை ஒப்பிடுகின்றன.

இவை தெளிவான முதலீட்டாளர்களுக்கு உதவலாம், ஆனால் சாமானியர்களுக்கு குழப்பத்தையும் தவறான முடிவுக்கும் கூட இட்டுச் செல்லலாம்.

20 க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு இணையதளங்கள் உள்ளன. சில இலவசமாக உங்களை ஒப்பீடு செய்ய அனுமதிக்கின்றன. பல தளங்கள் உங்களைப்பற்றிய தகவல்களைக் கொடுத்த பின்னரே அச்சேவையை அளிக்கின்றன.

இந்த தளங்களின் முக்கிய வருமானம் உங்களிடம் நிதிச் சேவைகளை நேரடியாக விற்பது மற்றும் விளம்பர வருவாய் தவிர்த்து உங்களைப்ப் பற்றிய தகவலை கமிஷனுக்கு விற்பதன் மூலமும் கிடைக்கிறது.

காப்பீட்டை ஒப்பிடுதல்

21 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மட்டுமில்லாது ஒவ்வொன்றும் பல காப்பீட்டுத் திட்டங்களையும் கொண்டிருப்பதால், தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம்.
காப்பீடு பொதுவாகவே 'தள்ளி' விடப்படும் பண்டமாக இருப்பதால் 'தேவையுள்ளவர்' (Prospects) பற்றிய தகவல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது.

ஒப்பீட்டாளர்களும் (Aggregators) காப்பீட்டுத் தரகர்களும் (Insurance Brokers)

IRDA (Insurance Regulatory and Development Authority) வின் படி ஒரு முகவர்(Agent) ஒரு நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை மட்டுமே விற்க முடியும். காப்பீட்டுத் தரகர்கள் (Insurance Brokers) அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் விற்கலாம்.

ஒரு தரகர் பல காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளைக் (Quotation) கோரிப் பெற்று உங்களுக்கு நல்லபடியாக காரியத்தை முடிக்கலாம். மொத்தத்தில் ஒரு தரகர் உண்மையில் வாடிக்கையாளரின் தேவையை காப்பீட்டு நிறுவனத்திடம் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். ஒரு முகவர் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக வாடிக்கையாளரைச் சந்திக்கிறார்.

தரகர்களும் இணையதளங்களை நடத்துகின்றனர். ஒப்பீட்டுத் தளங்களோடு அவர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே உங்களுக்கு என்னென்ன தேர்வுகள் (Options) உள்ளன என்று உங்களின் நலனே குறிக்கோளாக ஆலோசனை வழங்க வேண்டும். ஆனால் அப்படித்தான் செய்கிறார்களா?
அது இந்த இணைய தளங்கள் எப்படி பணம் பண்ணுகின்றன என்ற கேள்விக்கும், அதனால் உங்கள் நலன் சமரசத்திற்கு உள்ளாகிறதா என்ற கேள்விக்கும் இட்டுச் செல்லும்.

தரகர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தரகுத்தொகை (Commission) பெறுகிறார்கள். அதிக வணிகம் செய்தால் அதிக ஊக்கத்தொகை கிடைக்கும். www.policybazaar.com போன்ற சில தளங்கள் இரட்டை வருமானம் பெறுகின்றன.

1. உங்களைப் பற்றிய தகவலை காப்பீட்டு நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம்.
2. உங்களிடம் அவர்களே நேரடியாக காப்பீட்டை விற்பதன் மூலம் கிடக்கும் வருமானம்.

இதில் வாடிக்கையாளருக்கு எந்த இணையதளம் யாரால் நடத்தப்படுகிறது என்று தெரியாது. www.insurancemaal.in என்ற தளத்துக்கு இணைய பாதுகாப்பு சான்றிதழ் (Website Security Certificate) பிரச்சினையாக உள்ளது. இது போன்ற தளங்களில் உங்கள் வங்கித் தகவல்களை கொடுப்பது நல்லதல்ல.

நீங்கள்தான் குறி

சரி, அவர்களின் வருமான வழிமுறை, உங்களைப் பற்றிய தகவலை விற்பதாக இருந்தால் என்னாகும்?

அப்படியிருந்தால் அந்த தளங்கள் ஒப்பிட்டுக் காண்பிக்கும் முன் உங்கள் பெயர், செல்பேசியின் எண், மின்னஞ்சல் முகவரி முதலியவற்றைக் கேட்கும்.
அவற்றைத் தங்களுக்கு பணம் கொடுக்கும் காப்பீட்டு நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளும். பிறகு உங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும்.
நீங்கள் தேடிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பிற காப்பீட்டாளர்களிடமிருந்தும் வரும். ஏனென்றால் உங்கள் தகவல் பலருக்கும் விற்கப்பட்டிருக்கும்.

www.rupeetalk.com, www.myinsuranceclub.com போன்ற சில ஒப்பீட்டாளர்கள் நீங்கள் அழைக்கப் படுவதை விரும்புகிறீர்களா என்று உங்களிடம் உறுதி செய்த பின்பே உங்களைப் பற்றிய தகவலை காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு அனுப்பும்.

விலை

நிதிச் சேவைகளை இணையதளங்களின் மூலம் வாங்குவதில் விலை அனுகூலம் ஏதுமில்லை.

ஒப்பீட்டுத் தளங்களில் நிதித் திட்டங்களின் விலைப்புள்ளிகள் மாறுபட்டு இருக்கலாம். ஏனென்றால் அங்கே விற்பனை இணையத்தில் நடக்காது. காப்பீட்டு நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்ட பின்பே விற்பனை நடக்கும்.
தரகுத் தளங்களிலோ காப்புறுதித் தொகை (Premium) துல்லியமாக இருக்கும். ஏனென்றால் வாடிக்கையாளர் இணையம் மூலம் வாங்கிய பிறகு காப்புறுதித் தொகையை மறுபரிசீலனை செய்ய முடியாது.

காப்பீடு செய்வது என்பது கடன் வாங்குவது, கடன் அட்டைகள் வாங்குவது மற்றும் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்வது போன்றவற்றிலிருந்து மிகவும் மாறுபட்டது. கடன் வாங்குவதில் குறைந்த வட்டி விகிதம் முக்கியமானது. காப்பீட்டில் குறைந்த காப்புறுதித் தொகையே சிறந்தது என்று சொல்லமுடியாது.

இழப்பீட்டுத் தொகை (claims) வழங்கப்படும் விகிதம், காப்புறுதித் தொகை ஏற்றம், சேவைத்தரம், கட்டணங்கள், காப்புறுதி உடன்பாடு (policy), காப்புறுதிப் பரப்பு (coverage) மற்றும் நிபந்தனைகள் முதலிய அனைத்தையும் வாடிக்கையாளர் கணிக்க வேண்டும்.

எந்த ஒரு ஒப்பீட்டுத் தளமும் நிதிச் சேவைகளை வாங்குவது பற்றிய நிபுணத்துவ ஆலோசனையை கொடுப்பதில்லை. எந்த வகை வாடிக்கையாளருக்கு என்ன காப்பீடு தேவை? என்ன தொகைக்கு காப்பீடு செய்ய வேண்டும்? எந்த நிறுவனம் உகந்தது? எதனால்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது.

பெரும்பாலான தளங்கள் இன்றைய தகவலை மட்டுமே தருகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் நாளை என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ரிலையன்ஸ் மூன்று வருடங்களாக மிகக் குறைந்த காப்புறுதித் தொகையை வசூலித்தது. திடீரென்று 500% ஏற்றியது. நீங்கள் வேறு நிறுவனத்துக்கு மாற நினைத்தால் முன்கண்டறியப்பட்ட நோய்களுக்கான (Pre-existing diseases) காத்திருப்பு வருடங்கள் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும். எடுத்துகாட்டாக, ஒருவர் 3 வருடங்களாகக் காப்பீடு எடுக்கிறார். அவர் தந்தைக்கு இதய நோய்க்கான அறிகுறி இருந்ததால் 4 வருட காத்திருப்பு காலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னும் ஒரு வருடம் கழித்து மட்டுமே அந்த நோய்க்கான மருத்துவச் செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். ஆனால் அவர் வேறு நிறுவனத்துக்கு மாறினால் மீண்டும் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதனால் நிறுவனம் காப்புறுதித் தொகையை ஏற்றினாலும் அதிலேயே தொடரும் நிர்பந்தம் ஏற்படும்.

www.medimanage.com இன் இயக்குனர், புரந்தர் பவானி, "மருத்துவக் காப்பீடு ஒரு நீண்டகால சேவை. வாடிக்கையாளருக்கு வெறும் ஒப்பீடு மட்டும் போதாது. அவர்களுக்கு ஆலோசனையும் இழப்பீட்டுத் தொகையை கோரிப் பெறுவதில் உதவியும் தேவை", என்கிறார்.

பரஸ்பர நிதி (Mutual Fund)

www.fundsindia.com, www.fundsupermarket.com போன்றவை முக்கியமான தளங்களுள் சில. இவை இலவச சேவையை அளிக்கின்றன.

கேள்வி என்னவென்றால் எல்லா திட்டங்களையும் அளிப்பதே ஒரு சேவையை லாபகரமானதாக்குமா என்பதே. வாடிக்கையாளருக்கு எந்த திட்டம் தனக்குத் தேவை என்பது எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தேவை புரிதலும் ஆலோசனையுமே. www.fundsindia.com போன்றவை இவற்றைத் தருவதில்லை. அதன் முகப்பு பக்கத்தில் முதல் 5 பங்கு மற்றும் கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் (Top 5 Equity and Debt Schemes) என்ற தர வரிசைப் பட்டியல், அந்த தளத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது வாடிக்கையாளரைத் தவறான பாதையில் செலுத்தக் கூடும். மிகப் பிரபலமானதெல்லாம் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டியதில்லை. நிதிச் சந்தையில் பொதுமக்களின் அறியாமையும் ஒரு முக்கியக் காரணம்.
www.rupeetalk.com இந்த சேவையை அளிக்கிறது. ஆனால் இது அனைத்து தேர்வுகளையும் கொடுப்பதில்லை. இதில் ஏதாவது ஒரு திட்டத்தைச் சொடுக்கினால் அது www.fundsindia.com க்கு செல்கிறது. இவை எதுவும் பரஸ்பர நிதிகளின் தரம் பற்றிச் சொல்வதில்லை.

இந்தத் தளங்கள் எல்லாம் www.valueresearch.com என்ற பரஸ்பர நிதி ஆய்வு நிறுவனத்தின் தரவரிசையை உபயோகிக்கின்றன. இந்தத் தரவரிசையே விவாதத்திற்குரியது. அதைவிட விவாதத்திற்குரியது இந்தத் தளங்கள் அந்தத் தரவரிசையை உபயோகிக்கும் முறை. எடுத்துக்காட்டாக www.rupeetalk.com, டி எஸ் பி பிளாக் ராக் மைக்ரோ கேப் (வளர்ச்சி) நிதியை, அதன் முதன்மையாக மதிப்பிடப்படும் நிதிகளில் ஒன்றாக, கனரா ரொபெக்கோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் - டிவிடென்ட் நிதிக்கு அடுத்ததாக வரிசைப் படுத்தியுள்ளது. மனிலைப் (Moneylife) இன் ஆய்வுப்படி இரு நிதிகளுமே சிறந்த தேர்வுகளாய் இருப்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. fundsupermart.co.in சிபாரிசு செய்யும் நிதிகள் அகர வரிசைப்படி இருப்பதால் அதுவும் வாடிக்கையாளரைக் குழப்பலாம்.

வங்கிச் சேவைகள்

வங்கி சேவைகளையும் ஒப்பீடு செய்யலாம். வெறும் வட்டி விகிதத்தை மட்டும் கருதாமல் பல்வேறு நிலவரங்களையும் மக்கள் அலசுகிறார்கள். தனியார் வங்கியா? பொது நிறுவனமா? கூட்டுறவு வங்கியா? பாதுகாப்பு என்ன? போன்ற பல விடயங்களை பார்க்கிறார்கள். itrust.in, 15 வங்கிகளின் ஒருவருட வைப்பு நிதியின் ஒப்பிடுகிறது. அதில் ICICI வங்கியைப் பற்றிய தகவல் இல்லை. வங்கிக் கட்டணங்கள் மற்றும் திட்டங்கள் மாறும்போது அது இணையதளத்திலும் மாறும் என்று சொல்லமுடியாது.

நிதித் திட்டமிடுதல்

பணத்தைச் சரியாக மேலாண்மை செய்வதன் மூலம், உங்களது எதிர்கால நிதி சார் குறிக்கோள்களை ( வீடு வாங்குவது, பிள்ளைகளின் கல்வி, ஓய்வுக்காலம்), அடையும் செயல்முறையே நிதித் திட்டமிடுதலாகும்.

திட்ட ஆலோசகர் உங்களிடம் தேவையான தகவல்களைப் பெறுவார். உங்கள் தற்போதைய நிலையைக் கணக்கில் கொண்டு எதிர்கால இலக்குகளை அடையும் திட்டத்தை வகுத்துக் கொடுப்பார்.

itrust.in, investmentyogi.com, personalfn.com போன்ற இணையதளங்களும் bajajcapital, fullertonsecurities.in போன்ற பங்குத்தரகர்களும் (Share Brokers) இந்த சேவையை அளிக்கின்றனர்.

அவற்றிலிருந்து சில.
  • சொத்துக்கள், கடன்கள் மற்றும் பரஸ்பர நிதி, காப்பீடு, பங்குகள் ஆகிய முதலீடுகளை உள்ளடக்கிய நிதி அறிக்கையைக் கொண்ட நிதித்திட்டத்திற்கு 12000 ருபாய் வரை கேட்கிறார்கள்.
  • நிகர மதிப்பு (Networth), குறிக்கோள்களைப் பற்றிய பகுப்பாய்வு (Goal Analysis), பண வரவு செலவு பகுப்பாய்வு (Cash flow Analysis) மற்றும் 20 நிமிட அளவிலான ஒரு கலந்துரையாடல் கொண்ட ஒரு அடிப்படை நிதித் திட்டம் ரூபாய் 5000 ஆகும். மேலும் காப்பீட்டுத் திட்டம் (Insurance Planning), முதலீட்டு திட்டம் (Investment Planning) மூலம் குறிக்கோள்களை அடைவது மற்றும் ஓய்வு கால திட்டம் (Retirement Planning) போன்றவற்றைப் பெற ருபாய் 12000 ஆகும். சில குறிப்பிட்ட நகரங்களில் நிதித் திட்டமிடுபவரை (Financial Planner) நேரில் சந்திக்கலாம்.
  • அடிப்படை நிதித் திட்டமிடுதல் (Basic Financial Planning) மற்றும் உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning) இரண்டிற்கும் சேர்த்து Ffreedom.in ருபாய் 25000 கேட்கிறார்கள். அடிப்படை நிதித்திட்டம் மட்டும் ருபாய் 15000 ஆகும்.
  • Personalfn.com அடிப்படை நிதித் திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ருபாய் 5000 வாங்குகிறார்கள். முழுத் திட்டத்திற்கு ருபாய் 25000 ஆகும். மிக உயர் சேவைக்கு ருபாய் 1 லட்சம் வரை கேட்கிறார்கள். அதில் தற்போதைய முதலீட்டுத் தொகுப்பு (Investment Portfolio), வாடிக்கையாளரின் ரிஸ்க் வகைமை (Risk Profile), பண ஒதுக்கீடு (Cash Allocation), குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகள், நிகர மதிப்பு, காப்பீட்டுத் திட்டம், ஓய்வு காலத் திட்டம் போன்றவை அடங்கும். தற்போதைய முதலீட்டுத் தொகுப்பில் சிலவற்றை விற்கவும் சிலவற்றை வாங்கவும் ஆலோசனை கொடுப்பார்கள். அப்படி ஒன்றில் கீழ்க்கண்ட ஆலோசனை இருந்தது. "ULIP (Unit Linked Insurance Plans) அதிகக் கட்டணமுள்ள முதலீட்டு வகை என்பதால் தாங்கள் வைத்துள்ள ULIP திட்டங்களில் பணம் செலுத்துவதை உடனடியாக நிறுத்தி விடலாம். அதில் வரும் பணத்தை வேறு முதலீட்டில் போடலாம்". இங்கே திட்டத்தை சரண்டர் செய்ய சொல்லும் ஆலோசனை விவாதத்திற்கு உரியது. ஏனென்றால் அவ்வாறு அறிவுரைக்கப்பட்ட ULIP கள் வாடிக்கையாளரால் 2009 மற்றும் 2010 ஆரம்ப காலத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இப்போது சரண்டர் செய்தால் ஒன்றும் கிடைக்காது.
  • நாங்கள் பங்குத்தரகர்களின் நிதித் திட்டங்களைப் பரிசோதிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வழக்கமாக உங்களை பங்குப் பரிவர்த்தனை செய்யத்தூண்டலாம் என்பதால்.
முடிவு 

ஆக நீங்கள் ஒப்பீட்டு இணையதளங்கள் மூலம் நிதிச் சேவைகளை வாங்கலாமா வேண்டாமா? இவ்வளவு சீக்கிரம் வேண்டாம். பெரும்பாலான இணையதளங்கள் பணத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவர்கள் வருமானத்தைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். மேலும் உங்கள் சொந்தத் தகவல்களை அவர்கள் எப்படி உபயோகிப்பார்கள் என்று தெரியாது. அதனால் புத்தகங்கள், விமான பயணச் சீட்டை வாங்குவதைப் போல நிதிச் சேவைகளை இணையத்தில் வாங்குவது பற்றி நாங்கள் உறுதி கொடுக்க முடியவில்லை.