Thursday, August 18, 2011

நிதித் திட்டமிடுதல் (Financial Planning) - சில குறிப்புகள்

நிதித் திட்டமிடுதல் (Financial Planning) பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தது தான். நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், எதிர்பார் வாடிக்கையாளருக்கும் (Prospects) இது உதவும். நிதித் திட்டமிடுதல் பற்றிய தகவல்களையும், சந்தேகங்களையும் களைய இக்கட்டுரை உதவக்கூடும். தற்போதைய நிலவரத்தைக் கணக்கில் கொண்டே இதை எழுதுகிறேன்.

நிதித் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்கள் நிதியைச் சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் எதிர்கால குறிக்கோள்களை அடையும் முறைமையே நிதித் திட்டமிடுதல் என்பது. குறிக்கோள்கள் நிதி சம்பந்தப் பட்டவை மட்டுமே. பண ரீதியாக நீங்கள் எங்கே நிற்கிறீர்கள், எங்கே போக விரும்புகிறீர்கள் என்பதோடு அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.


நிதித் திட்டத்தில் என்ன இருக்கும்?

பாதுகாப்புத் திட்டம் (Protection Planning)
வாடிக்கையாளரின் ஆயுள் மற்றும் அவரது சொத்துக்களின் இழப்பால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் திட்டம். நிதித் திட்டத்தில் முதலிடம் இருப்பதைப் பாதுகாப்பது தான். வாடிக்கையாளரின் ஆயுள் காப்பீடு போதுமானதா என்பது  கணிக்கப்படும். இதைப் பற்றிய எனது முந்தைய பதிவைப் பார்க்கவும்.
http://panavivakaram.blogspot.com/2011_06_01_archive.html
மேலும் மருத்துவக் காப்பீடு, வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருட்கள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, கடன் காப்பீடு போன்றவையும் திட்டமிடப்படும். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில் நிபுணர்களுக்கும், நிறுவனத்தின் இயக்குனர் போன்றவர்களுக்கும் பொறுப்புக் காப்பீடு (Liability Insurance) எடுப்பதும் முக்கியம். திட்டமிடுபவர் அனைத்தையும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கணக்கிடுவார்.


முதலீட்டுத் திட்டம் (Investment Planning)
வாடிக்கையாளரின் முந்தைய முதலீட்டைச் சரிபார்த்து, அது அவருடைய குறிக்கோள்களுக்கு இட்டுச் செல்லுமா என்பதின் அடிப்படையில் மாற்றங்களை செய்வதோடு புதிய முதலீடுகளையும் திட்டமிடுவது.

வருமானவரி திட்டம் (Tax Planning)
சரியான முதலீடுகள் வழியாக வருமான வரிச் சுமையைக் குறைப்பதற்கான திட்டம்.

ஓய்வுத் திட்டம் (Retirement Planning)
ஓய்வு பெற விரும்பும் வயதின் அடிப்படையில், மீதமுள்ள ஓய்வு காலத்துக்கான நிதியைக் கணக்கிட்டு, அதற்கான முதலீட்டைத் திட்டமிடுதல்.
மகன் மற்றும் மகளுக்கான எதிர்கால குறிகோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

குழந்தைகள் எதிர்காலத் திட்டம்
குழந்தைகளுக்கான எதிர்காலக் குறிக்கோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

உடைமைத் திட்டம் (Estate Planning)
வாடிக்கையாளர்கள் தங்களது சொத்துக்களை யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று திட்டமிட்டு அதை சட்டப்பூர்வமாக பதிவு (உயில் போன்றவை) செய்வதே உடைமைத் திட்டமிடுதலாகும். இது மிகவும் முக்கியம். சரியாகச் செய்யப்படாவிட்டால் வாரிசுகளுக்கிடையில் பிரச்சினையில் பொய் முடியும். விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் இக்காலத்தில் சிறு சொத்துடையவர்களும் இதில் கவனம் செலுத்துவது நல்லது. இது ஒரு வழக்கறிஞரின் துணை கொண்டே செய்யப்படும்.

பயன்கள்
  • நீங்கள் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகளுக்கு ஒரு திசையைக் காட்டவும் அர்த்தம் கொடுக்கவும் உதவுகிறது.
  • உங்களுடைய ஒவ்வொரு நிதி சார் முடிவுகளும் பிற பண விவகாரங்களை எப்படி பாதிக்கும் என்று அறிவது. (30 வயதில் நீங்கள் வாங்கும் கார் உங்களுடைய ஓய்வூதிய நிதியை எவ்வளவு குறைக்கும்?)
  • ஒவ்வொரு பண முடிவும் ஒரு முழுமையான சித்திரத்தின் ஒரு பகுதி என்று பார்க்க முடிவது.
  • வாழ்க்கை சூழலின் மாற்றத்திற்கு ஏற்ப நிதி விசயங்களை சரியாகக் கையாண்டு குறிக்கோள்களில் இருந்து மாறாமல் செல்வது. (புதிய வேலை, அதிக சம்பளம், புதிதாகத் தொழில் தொடங்குதல், சீக்கிரமே ஓய்வு கொள்ள விரும்புதல் போன்ற பல)
நீங்களே செய்து கொள்ளலாமா?
தாராளமாகச் செய்யலாம். நீங்களே புத்தகங்கள் வாங்கிப் படிக்கலாம். சில மென்பொருட்களின் துணை கொண்டு செய்யலாம். சில உயர் மதிப்பு தனிநபர்களை (High Netwoth Individuals - HNI) சந்திக்கையில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு இதையெல்லாம் தாங்களே செய்யக்கூடியவர்கள் என்று சொல்வார்கள். அப்படி செய்தும் இருப்பார்கள். அவர்களுடைய முதலீடுகளைப் பார்த்த பின்பு கொடுக்கும் விளக்கமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்களால் எல்லா நிதிச் சேவை பண்டங்களின் நுணுக்கங்களையும் ஆராயும் அளவுக்கு அதில் நிபுணத்துவமோ, ஆராய நேரமோ இருக்காது. அது அவர்கள் வேலையும் அல்ல. சிலர் தங்கள் நிதி பண விவகாரங்களை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டார்கள். தங்கள் மனைவியிடம் கூட. ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. தனக்கு ஒரு நிபுணரின் உதவி தேவையா என்று.

நிதித் திட்டமிடுபவர் (Financial Planner) என்பவர் யார்?
நிதித் திட்டமிடும் முறைமை வழியாக உங்கள் எதிர்காலக் குறிக்கோள்களை அடைய உதவுபவர். பெரிய சித்திரத்தைக் காண்பவர். ஒவ்வொரு சிறிய பண விவகாரமும் மொத்த நிதி நிலைமையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடத் தெரிந்தவர்.  மொத்தத்தில் தனிநபர் நிதி சார்ந்த முழுமையான பார்வையைக் கொண்டவர்.

நிதித் திட்டமிடும் சேவையைத்தான் பெறுகிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
தற்போதைய நிலவரப்படி, நிதித் திட்டமிடுதல் தர வாரியம் (FPSB - Financial Planning Standards Board of India) அளிக்கும் சான்றிதழ் பெற்ற நிதித் திட்டமிடுபவர்களையே (Certified Financial Planners) இந்த சேவையைக் கொடுக்கும் முழுமையான தகுதி கொண்டவர்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் இதைச் செய்ய இவர்கள் தான் தகுதியானவர்கள் என்று அரசாங்க வரையறை எதுவும் இல்லை. 
சான்றிதழ் பெற்றவர்களை இந்த இணைய தளத்தில் காணலாம். http://www.fpsbindia.org/

நிதித் திட்டமிடல் முறைமை (Financial Planning Process)

1. வாடிக்கையாளர் - திட்டமிடுபவர் உறவை வரையறுத்தல். முதல் சந்திப்பில் வாடிக்கையாளர் தங்களது எதிர்பார்ப்பையும் திட்டமிடுபவரிடம் இருந்து அவருக்குக் கிடைக்கும் சேவைகளைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொள்வது. இது நீண்ட காலத் தொடர்பு என்பதால் பரஸ்பரப் புரிதலுக்கு ஒரு தொடக்கமாக அமையும்.

2. வாடிக்கையாளர் தகவல் சேகரிப்பு. வாடிக்கையாளரின் நிதித் தகவல்களை (வருமானம், சொத்து, கடன், சேமிப்பு, முதலீடு, காப்பீடு) திட்டமிடுபர் தெரிந்து கொள்வது. மேலும் அவரது எதிர்கால குறிக்கோள்களையும் (குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணம், புதிய தொழில் தொடங்குதல்) திட்டவட்டமான கால அட்டவணையில் வரிசைப் படுத்துதல். தேவையான ஆவணங்களையும் பெற்றுக்கொள்வது.

3. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் எங்கே நிற்கிறார் என்று தெரிந்துகொள்வது. சொத்துக்கள், கடன்கள், பணவரத்து முதலிய தகவல்கள் அடிப்படையில் வாடிக்கையாளரின் நிகர மதிப்பு (Net Worth) கணக்கிடப்படும். அவருடைய மாதாந்திர வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் நிகர பண வரத்து (Net Cash Flow) என்னவென்று தெரியவரும். எதிர்கால குறிக்கோள்களை சந்திக்க இது மிக முக்கியம். 

4. மேற்கண்ட காரியங்களின் பின் ஒரு திட்டத்தை வகுப்பது. நிதித் திட்டமிடுபவர் தகவல்களை ஆராய்ந்து வாடிக்கையாளர் நிதி நிலையை தீர்மானித்து விட்டு, குறிக்கோள்களை எதிர்காலத்தில் அடையக் கூடிய சாத்தியமுள்ள திட்டங்களை வகுப்பார். அதை வாடிக்கையாளரோடு அமர்ந்து பேசி மேலும் சரி செய்து, ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன் வைப்பார். 

5. திட்டத்தை செயல்படுத்துவது (Implementation). வரையப்  பட்ட திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது. எடுத்துக் காட்டாக, ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு, 17 வருடங்கள் கழித்து 25 லட்ச ருபாய் தேவை என்ற குறிக்கோள் வைத்திருக்கிறார். அதற்கு அவர் மாதம் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்றும் அது எவ்வளவு விளைச்சலைத் (Returns) தரும் சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் திட்டத்தில் இருக்கும். திட்டப்படி மாதம் ..... தொகையை அவர் சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) போட வேண்டும்.ஆனால் அவர் முன் நூற்றுக்கணக்கான தேர்வுகள் உள்ளன. இதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதே பெரிய வேலை. அதை வாடிக்கையாளரே செய்ய நிறைய பொறுமையும் நேரமும் ஆகும். அப்படியே இருந்தாலும் பொருளறிவு (Product Knowledge) இருக்கிறதா என்பது முக்கியம். அதனால் திட்டத்தைச் செயல் படுத்துவதிலும் திட்டமிடுபரின் பணியை கோருவது பொருத்தமாக இருக்கும்.

6. மேற்பார்வை பார்ப்பது. திட்டம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருப்பது. வாடிக்கையாளரின் நிதி நிலையைப் போலவே. அதனால் போட்ட பாதையிலேயே போய்க் கொண்டிருக்க முடியாது. அதனால் வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசி வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மறு பரிசீலனை (Review) செய்ய வேண்டும். திட்டத்தின் போக்கை திட்டமிடுபவரும், தனது நிதி நிலையில் ஏற்படும் மாற்றத்தை (சம்பள உயர்வு, வேறு நிறுவனத்துக்கு மாறுதல், வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது போன்றவை) வாடிக்கையாளரும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது முக்கியம். மாறிக்கொண்டேயிருக்கும் நிதி நிலைக்கு ஏற்ப திட்டமும் மாறிக்கொண்டேயிருக்கும்.

கட்டணம் எவ்வளவு?
முக்கியமானது. திட்டமிடுபவருக்கு மட்டுமல்ல வாடிக்கையாளருக்கும்தான். இலவசமாக எந்த பணியையும் யாரும் செய்ய மாட்டார்கள். இதை உங்களுக்கு இலவசமாக யாரும் செய்தால் அவருக்கு இதனால் என்ன ஆதாயம் என்று கேளுங்கள்? பதிலை வைத்தே அவரின் நேர்மையை தெரிந்து கொள்ளலாம். உண்மையில் கட்டணத்திற்கு ஒரு வரையறை கிடயாது. வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசித்தான் ஒரு கட்டணத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் தேவையும், பணியும் மாறுவதால் பொதுவான கட்டணம் சாத்தியம் இல்லை. சந்தையில் எப்படி கட்டணம் இருக்கிறது என்று முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html
அதில் பார்க்கலாம். 
நிதித் திட்டமிடுபவருக்கு இரு வழியில் வருமானம் வரலாம். ஒன்று, கட்டணமாக கோருவது. இரண்டாவது, திட்டத்தைச் செயல்படுத்தும் போது கிடைக்கும் முகவர் தரகு (Agency Commission). திட்டம் அளிக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர் அதைத் தன் மூலமாக செயல் படுத்துவதை உறுதிப்படுத்த முடியாது. செயல்படுத்துவார்களா என்பதையே உறுதிப் படுத்த முடியாது. அதனால் திட்டமிடுபவர் தான் செய்த பணிக்கான கட்டணத்தை கோரிப் பெறுவதே நடக்கிறது. முதல் சந்திப்பிலேயே அவர் குறைந்த பட்சம் எவ்வளவு என்றும் சொல்லிவிட வேண்டும். பொதுவாக இவ்வளவிலிருந்து அவ்வளவு வரைக்கும் என்று சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் முதல் சந்திப்பிலேயே   வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணியின் ஆழ அகலம் திட்டமிடுபவருக்குத் தெரியாது. அதே நேரம் வாடிக்கையாளருக்கோ கட்டணம் எவ்வளவு என்றே தெரியாமல் தனது முக்கியத் தகவல்களைப் பகிரவும் முடியாது. அதனால் திட்டமிடுபவர் தனது கட்டண வரம்பைத் தெரிவித்து விடலாம் (எடுத்துக்காட்டாக, ரூ.5000 லிருந்து  ரூ.25000 வரை என்று). அது சரியென்றால் வாடிக்கையாளர் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். இதுவே தற்போதைய நடைமுறை. 

3 comments:

பிரதீப் said...

too good da! really an eye opener...

Anonymous said...

nice article about financial planner.

meenakshi said...

a nice article

Post a Comment