Sunday, August 7, 2011

எல்லா விலங்குகளும் சமமானவை

நான் முன்பு வேலை செய்த வங்கி சார நிதி நிறுவனத்தில் எப்போதும் பெருமையாக இப்படிச் சொல்வார்கள். LIC க்கு அடுத்து அதிக முகவர்களை உடையது நமது நிறுவனம் தான் என்று. நான் அதே நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சியில் இருந்த போது கரூர் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் எங்களது முகவர் இருந்தார். அவரை ஊக்குவிக்க நான் அங்கே செல்வதுண்டு. அவர் LIC முகவர் என்பதோடு தபால் துறை தொடர் வைப்பு நிதி (Recurring  Deposit) யும் செய்து கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் அவர் சொல்வதை முழுதும் நம்பிச் செய்வார்கள்.அவர் நீண்ட காலமாக அவர்களுடனேயே வாழ்ந்துவருகிறார் என்பதற்கும் மேலாக, LIC மற்றும் தபால் துறை தொடர்பானவர் என்பது அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். LIC வசீகரமானது இல்லையென்றாலும் பிரமாண்டமானது.
பி வி சுப்பிரமணியம் ஒரு கணக்காளர் (Chartered Accountant) என்பதோடு நிதித் துறைப் பயிற்சியாளரும் கூட. www.subramoney.com என்ற தளத்தில் நிறைய எழுதுகிறார். அவர் எழுதிய கற்பனையான ஒரு உரையாடல்.

LIC : வணக்கம் சார், அரசாங்கத்தோட நான்சென்ஸ் லிமிடெட்டின் முதல் பொது பங்கு வெளியீட்டுக்கான (IPO) ரூ. 8000 கோடிக்கு காசோலை இங்கிருக்கு. இந்த வெளியீடு நல்லாப் போகும்னு நம்புறேன்.

நிதி அமைச்சகம் : ஆமாம், பங்கு வெளியீடே பத்தாயிரம் கோடிக்குத் தானே. அதனாலே நல்லாப் போகும்.

LIC: சார், போட்டித் தளம் சமமா இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிற IRDA வோட வாழுறது ரொம்பக் கஷ்டமா இருக்கு.

நிதி அமைச்சகம் : என்ன சம தளத்தைப் பத்திக் கவலைப் படுற? செலவுகளா?

LIC: இல்ல சார். மார்டாலிட்டி தொகையையும்*(Mortality rate) ரைடர் தொகையையும்* (Rider) ஏற்றி செலவையெல்லாம் சரிக்கட்டிட்டோம்.

நிதி அமைச்சகம் : ஓஹோ. அப்ப வேறேன்னத்தப் பத்திப் பேசுறீங்க? 

LIC: LIC பாலிசிக்கு அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்கிற சரத்து ரொம்ப அநீதியானதுன்னு IRDA அரசு கிட்ட எடுத்துச் சொல்லுது. ஏன்னா, மத்த போட்டிக்காரங்களுக்கு அந்த வாய்ப்பு இல்ல, முடியவும் முடியாது.

நிதி அமைச்சகம் : மக்களெல்லாம் SBI க்கு அரசு உத்தரவாதம் இருக்குன்னு நம்புறாங்களா?

LIC: சரியாத் தெரியல சார். இருக்கலாம். அதுனாலதான் அவங்க நிறைய பாலிசிகள வித்துருக்காங்க போலருக்கு.

நிதி அமைச்சகம் : இப்ப நாங்க என்ன செய்யணும்னு விரும்புறீங்க?

LIC: பத்திரிக்கைகளுக்கு மட்டும் அந்த உத்தரவாதம் இன்னும் இருக்குன்னு சொல்லீருங்க சார்.

நிதி அமைச்சகம் : அத நாங்க செய்ய முடியும். ஆனா ஒரு விசயம் தெளிவு படுத்துங்க. இப்ப நீங்க நெறைய ULIP * (Unit Linked Insurance Plan) விக்கிறீங்க. ULIP க்கு உத்தரவாதம் கொடுக்க முடியாதுல்ல.

LIC: உண்மைதான். உங்களுக்கும் எனக்கும் ULIP க்கு உத்தரவாதம் கொடுக்க முடியாதுன்னு தெரியும். ஆனா, பொதுமக்களுக்கு தெரியாதுல்ல.

நிதி அமைச்சகம் : ஆனாலும் இது எப்படி உதவும்? எனக்கு புரியல.

LIC: நம்ம ஏஜெண்டுக என்ன சொல்வாங்கன்னா, சம் அஷ்யூர்டு (Sum Assured - ஆயுள் காப்பீட்டுத் தொகை) ரூ.10 லட்சம், வருச ப்ரீமியம் ரூ.25000௦ மூனு வருசத்துக்கு கட்டுனா ரூ.10 லட்சம் கையில வரும்னு.

நிதி அமைச்சகம் : மக்கள் நம்புவாங்களா?

LIC: நம்ம ஏஜெண்டுகள் நல்லா பயிற்சி எடுத்துருக்காங்க. சார் பாருங்க, சம் அஷ்யூர்டு ரூ.10 லட்சம், அப்படின்னா LIC பத்து லட்சம் கொடுக்கும்னு விளக்குவாங்க. அது போக நீங்க கொடுத்த அரசாங்க உத்தரவாதம் பற்றிய பத்திரிகை செய்தியையும் சேர்த்துக்குவோம்.

நிதி அமைச்சகம் : அற்புதம். நீங்க நெறைய எண்டோமென்ட் திட்டங்களையும் (Endowment Plan) விற்பனை செய்வீங்கன்னு நம்புறேன். அடுத்த வருச கடன் திட்டம் என் மேசையில இருக்கு. எப்படியும் சந்தையில ரூ.200000 கோடியாவது திரட்ட வேண்டியிருக்கும் ( கோயில் பூட்டுகளைத் திறந்து பணத்தையெல்லாம் அரசாங்கமே வைத்துக் கொள்ளலாம்னு சுப்ரீம் கோர்ட் சொல்லாவிட்டால்). உங்கள் உதவி தேவைப்படும்.

LIC: கண்டிப்பா சார். நாங்க செய்வோம். எண்டோமென்ட் 30% கமிசன் திட்டம் தான். அதனால விக்கிறது சுலபம். சார் அந்த IRDA வோட சமமான போட்டி பற்றி? 

நிதி அமைச்சகம் : 'வலுவான ஆளோட பேச்சைத் தான் ஒழுங்காணையம் கேட்கும்', என்ற பழைய பழமொழியை மறந்துராதீங்க. அதனால அது தொடரும்.

LIC: மத்த காப்பீட்டு நிறுவனங்களும் இதே வசதியை அரசாங்கத்திடம் கேட்டால்?

நிதி அமைச்சகம் : நாங்களும் அத யோசனை பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். இப்படித்தான் ஒரு தனியார் நிறுவனத்திடம் இத தெரிவிச்சப்ப அவன் எங்க கணக்க (Balance Sheet ) கேட்கிறான். என்ன அராஜகம்!

LIC: அப்புறம் என்னாச்சு சார்?

நிதி அமைச்சகம் : அவங்க எங்க கணக்கிலிருந்து LIC யோட சந்தை மதிப்பை கழிச்சுப் பார்த்தப்ப எங்க நிகர மதிப்பு தலைகீழா ஆயிருச்சு.

LIC: அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க சார்?

நிதி அமைச்சகம் : ' LIC அரசாங்க உத்தரவாதத்தைக் கேட்கணுமா, இல்ல அரசாங்கம் LIC உத்தரவாதத்தைக் கேட்கணுமா?' ன்னு கேட்டாங்க. ரொம்பக் குரூரம். மலிவான ஆட்கள். அவங்க லைசென்சைப் புதிப்பிக்கனுமான்னு யோசிக்கிறேன்.

'எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால் சில விலங்குகள் மற்றவற்றை விட அதிக சமமானவை.' - ஜார்ஜ் ஆர்வெல்

*Mortality rate - இறப்பு இழப்பீட்டுக்கான கட்டணம் 
*Rider - மேலதிக கட்டணம் 
*ULIP - கட்டும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் ஆயுள் காப்பீட்டிற்கும், பிறகுள்ளது பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும். இழப்பீடாக ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சந்தை மதிப்புத் தொகையும் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment