Friday, September 23, 2011

நிதித் திட்டமிடுதல் ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?

மேற்கண்ட தலைப்பில் வந்த ஒரு எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) கட்டுரை வாடிக்கையாளர்களுடனான எங்களது அனுபவங்களைப் பெரிதும் ஒத்திருந்தது. அதில் குறிப்பிட்ட காரணங்கள் பற்றிய எங்களது கருத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு.

  • பொதுவாக முதல் சந்திப்பில் நிதித் திட்டமிடல் பற்றிப் பேசும் பொது மிக ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் தேவை என்பதிலும், சீக்கிரம் திட்டமிட ஆரம்பிப்பதில் உள்ள நன்மையையும் நன்கு உணர்கிறார்கள். அடுத்த கட்ட நகர்வு தான் பலருக்கும் பிரச்சினை. அதாவது செயல் படுத்துவதில் தான் சுணக்கமே. இது பெரும்பாலும் திட்டமிடுபவர் (Financial Planner) தேவைப்படும் தகவல்களைக் கேட்கும் போதே ஆரம்பிக்கிறது. பல இளைஞர்களுக்கு (25 - 35 வயதுக்காரர்கள்) பல தகவல்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பலருக்கு தங்கள் வங்கி கிளை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. மாத வருமானக்காரர்களுக்கே இது பொருந்தும். இவர்களுக்கு தங்களுடைய நிதித் தகவல்களை எடுத்துக் கொடுப்பது பெரிய காரியமாக இருக்கிறது. இந்த மனப்பாங்குக்குக் காரணமாக நான் நினைப்பது, அவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான தயக்கமே. தங்களுடைய உண்மையான நிதி நிலையை (அவர்கள் நல்ல நிதி நிலையில் இருந்தாலுமே) தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு பதற்றம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதைத் தள்ளிப் போடவே தகவல்களை அளிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். தாமதத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலும் பணிச்சுமையே. முதலீடுகள், காப்பீடுகள், வருமானம் பற்றிய தகவல், கடன் விவரங்கள் போன்றவற்றை தோண்டியெடுப்பது தேர்வெழுதும் உணர்வை கொடுக்கிறது போல. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வசதியும் நெருக்கடியற்ற நிலையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 
  • இளம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வை இப்போதே அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது. அதுவும் கடன் வாங்கி. சொத்துக்களை கட்டமைக்க வாங்குவதைக் காட்டிலும் பொருட்களை நுகர்வதற்கே (ஹோம் தியேட்டர், செல் போன்கள், கார்) அதிகம் கடன் வாங்கப் படுகிறது. நிதித் திட்டமிடல் தங்களுடைய வாழ்க்கைமுறை நுகர்வை (Lifestyle consumption) பாதிக்ககூடும் என்பதால் அதைத் தள்ளிப்போடவே விரும்புவார்கள். 'எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருக்கிறது', என்ற மனப்பாங்கே இதற்குக் காரணம். 
  • நிறைய வாசிப்பதினால் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு. நிறையப் படிப்பது தவறில்லை. உண்மையில் அவ்வாசிப்பு விழிப்புணர்வை கூட்டி நிபுணர்களின் வழிகாட்டுதல் பற்றிய மதிப்பீட்டை  ஏற்படுத்த வேண்டும். மாறாக, தாங்களாகவே இதைச் செய்து கொள்ள முடியும் என்ற அபிரிமிதமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையில் அப்படிச் சுயமாகத் திட்டமிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.    ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆழ்ந்த கல்விப் பின்புலமும் நீண்ட அனுபவமும் உடைய நிபுணர்களின் வழிகாட்டுதல் எப்போதும் பலமே. இதைச் சட்டை செய்யாதவர்கள் தங்களின் வாசிப்பின் வழியாக, தங்களைக் குறி வைத்து சந்தைப்படுத்தப் படும் பல நிதிப் பண்டங்களை (காப்பீடுகள், பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கி பின் குழப்பத்துக்கு ஆளாவதைக் காணலாம். எனக்குத் தெரிந்த, நன்கு வருமானம் ஈட்டுகிற, நிறைய முதலீடுகள் செய்துள்ள, ஒரு இளம் தொழிலதிபர் நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார். இவர் நிதி சார்ந்த பல பத்திரிக்கைகளை வாசிப்பவர்.
  • நிதி சார் குறிக்கோள் இல்லாமலிருப்பது. பெரும்பாலான இளம் பெற்றோர் தங்களது குழந்தைகள் மீதான கனவோடு அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு பத்து வருடங்கள் கழித்து அவர்களின் உயர் படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்றால் தெரியாது. தோராயமாக் கூட கணக்கிட மாட்டார்கள். அதைப் போலவே தங்களின் ஓய்வு கால நிதி பற்றியும் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்.இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் ஓய்வு பெரும் நிலையில் இருப்பவர்களும் கூட கவனம் இல்லாமல் இருப்பது இங்கே சாதாரணம். இது ஒரு நிதி சார்ந்த இலக்கு என்ற தெளிவு இல்லாததுதான் காரணம்.
  • கட்டணம் இன்னொரு காரணம். நிதித் திட்டமிடுதல் போன்ற விசயங்களுக்கு பெரிய முன் வரலாறு இங்கே இல்லை. ஆலோசனைக்கு கட்டணம் செலுத்துவது மருத்துவம் தவிர பிற துறைகளில் இன்னும் பிரபலமாகவில்லை. இதற்குப் போயா இவ்வளவு? அப்படியென்ன வேலையிருக்கிறது இதில்? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உண்மையில் ஒரு நிதித் திட்டத்தைத் தயாரிப்பதில் திட்டமிடுபவர் தனது பணி நேரத்தில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். நிதிக் கருவிகளைக் (Financial  Tools) கொண்டு, தனது கல்வி, அனுபவம் மற்றும் பொருளறிவு (Product Knowledge) ஆகியவற்றோடு ஒரு தனி நபரின் பிரத்யேகமான சூழலையும் கணக்கில் கொண்டே திட்டத்தை வரைகிறார். இதை ஒரு சூத்திரத்தில் அடக்க முடியாது. ஒவ்வொரு திட்டமும் தனித்தன்மை வாய்ந்தது. 
னால் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. கொஞ்சகொஞ்சமாக படித்தவர்களிடையே நிதித் திட்டமிடுதல் பற்றிய சிந்தனை கூடிவருகிறது. நிதிவிவகாரம் பற்றிய பத்திரிக்கைகளும் பெருகி வருகின்றன. தொழில் விவகாரங்களை அலசும் நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தனி நபர் நிதி (Personal Finance) பற்றிய பதிவுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதோடு தனி நபர் நிதி பற்றி மட்டுமே பேசும் இதழ்கள் வெளி வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மாறிவரும் சூழல் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. 

    2 comments:

    Anonymous said...

    Super Sir. Advertisement plays with emotions. We believe those ads and stories on face value without analyzing. Actually, most of the products are not going to serve the purpose as well. How else Insurance companies push traditional policies (Which yields less than 5-6% - Faraway from inflation)?

    shmuthu said...

    Good article.. Expecting more in this line.. Today also there is followup article in ET. bring that also..

    Post a Comment