Thursday, January 3, 2013

பங்குச்சந்தை முதலீடு - ஒரு நேர்காணல்


PRASHANT JAIN, EXECUTIVE DIRECTOR AND CHIEF INVESTMENT OFFICER, HDFC MUTUAL FUND 

 ஹெச் டி எப் சி பரஸ்பர நிதியின் (HDFC Mutual Fund) முதன்மை செயல் அலுவலரும் (CEO) செயல் இயக்குனருமான (Executive Director) பிரஷாந்த் ஜெயின் தி ஹிந்து பிசினஸ்லைன் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து சில விஷயங்கள்.   
  • முதலீடு பற்றிய எனது அணுகுமுறை மிக எளிமையானதாகவே இருந்திருக்கிறது. நல்ல நிர்வாகிகளால் மேலாண்மை செய்யப்படும் தொடர்ந்து தாக்குபிடிக்கக் கூடிய தொழில்களை , நல்ல விலையிலோ குறைவாகவோ வாங்கி போதுமான அளவுக்குப்  பன்முகப்படுத்தி பொறுமையோடு இருப்பது.
  • நல்ல மதிப்பீட்டில் கிடைக்கும் தரமான, தாக்குப்பிடிக்கக்கூடிய தொழில்களில்முதலீடு செய்வது முதலீட்டு செயல்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
  • ரிஸ்க் கட்டுப்படுத்த வேண்டி, மோசமான நேரங்களிலும் நெருக்கடிக்கு பணியாமல் இந்த ஒழுங்கைத் தக்க வைப்பது முக்கியம்.
  • குறைந்த பட்ச வீழ்ச்சி அபாயத்துடன் ஓரளவு தொடர்ச்சியாக மிதமான வருமானத்தை உற்பத்தி செய்யும் ஒரு முதலீட்டாளர், சில நேரங்களில் அபிரிமிதமான வருமானத்தையும் ஆனால் சமயங்களில் குறிப்பிடத்தக்க நட்டங்களையும் ஏற்படுத்தும் முதலீட்டாளரோடு  ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பார். 16 சதவிகித பத்தாண்டு  வருமானம் என்பது  20 சதவிகித 9 ஆண்டு வருமானத்தைத் தொடர்ந்த பத்தாவது வருட 15 சதவிகித நட்டத்தைவிட அதிகமாக இருக்கும்.
  • நான் பங்குச்சந்தையில் இருந்து வந்துள்ள 20 வருடங்களில் 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்துள்ளதோடு அந்த ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் தவறிழைத்ததை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இது சங்கடமானது ஆனாலும் துரதிர்ஷ்டவசமான உண்மை.
  • கடந்த 20 ஆண்டுகளாக நான் பங்குச் சந்தையில் இருந்து வந்துள்ள காலத்தில், 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்ததோடு, ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பாலான  முதலீட்டாளர்கள் காலம் தவறுவதைப் பார்த்திருக்கிறேன். இது சங்கடமானாலும் உண்மை.
  • 2008 மார்ச்சில் 15600 அளவுகளில் முடிவதற்கு முன், 2003 ல் 3000 அளவுகளிலிருந்து  2008 ஜனவரியில் 21000 க்கு மேலான உச்சத்திற்கு சென்செக்ஸ் (SENSEX) சென்றபோது, பங்குச்சந்தை பரஸ்பர நிதி (EQUITY MUTUAL FUND) விற்பனை 2002-2003ல் வெறும் ரூ.118 கோடியிலிருந்து 2007-2008ல் ரூ.53,000 கோடிக்கு உயர்ந்தது. அதிலிருந்து, 2009 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில், சரியும் சந்தையிலும் குறைந்த PE மடங்குகளிலும் பரஸ்பர நிதி ரூ.6000 கோடி வெளியேறக் கண்டிருக்கிறது. எளிதாகச் சொன்னால், PE அதிகமாக இருந்த காலத்தில், 2008 நிதியாண்டில் மட்டும் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி வாங்கப் பட்டிருக்கின்றது. ஆனால் PE குறைவாக இருந்தபோது நான்கு வருட காலத்தில் கிட்டத்தட்ட ரூ.6000 கோடி மதிப்புள்ள பங்கு நிதி விற்கப்பட்டது.
  • இது ஏனென்றால், முதலீட்டாளர்கள் PE* மடங்குகளில் (PE Multiple) மீதல்லாது கடந்த கால வருமானம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதுதான்.
  • முதலீட்டாளர்கள் குறைந்த PE மடங்குகளில் முதலீடு செய்யப் பழக வேண்டும். சந்தை சரியாக இல்லாத காலத்தில், சந்தையின் மனநிலை பலவீனமாக இருக்கும்போது செய்திகள் மோசமாக வரும்போதுதான் குறைந்த PE அளவுகள் கிடைக்கும்.
  • தற்போது சந்தை 20 சதம் மேலிருந்தாலும் PE விகிதம் நீண்டகால சராசரிக்கும் கீழேயே உள்ளது. மேலும், வட்டி விகிதம் கீழே செல்ல வாய்ப்புள்ளது.
  • எனது கருத்தில், முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் தாக்குபிடிக்கும் திறனுக்கு ஏற்றவாறும் நீண்டகால நோக்கிலும் பங்குகளில் ஒதுக்கீடு செய்வதைக்  கூட்டுவதையோ தக்கவைத்துக் கொள்வதையோ செய்ய வேண்டும்.
   * PE - Profit Earnings Ratio = ஒரு பங்கின் விலை / ஒரு பங்கின் வருமானம் 

Monday, November 19, 2012

மருத்துவக் காப்பீடு

 
ந்த வார நாணயம் விகடனில் வெளியான எனது மருத்துவக் காப்பீடு பற்றிய கட்டுரை இங்கே. - அபூபக்கர் சித்திக், CFP

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பொதுக் காப்பீடு நிறுவனங்களே அதிக அளவில் வழங்கி வந்தன. ஆனால், சமீப காலமாக ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் இந்த பாலிசிகளை வழங்கி வருகின்றன. இவற்றில் எது பெஸ்ட் சாய்ஸ்? என்பதைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் அபுபக்கர்.  


''ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் (Stand alone) மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் பல்வேறு வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இவற்றில் ஏராளமான உட்பிரிவுகள் அடக்கம். இவற்றில் நமக்குத் தேவையான மற்றும் சரியான திட்டத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதைப் பார்க்கும் முன் நமக்குக் கிடைக்கும் பல்வேறு திட்டங்களை வகைப்படுத்தி முதலில் அறிந்துகொள்வோம்.
* மருத்துவமனை செலவு (Hospital Cash);
* பணப் பலன் (Defined Benifit plan);
* தீவிர நோய் பாதிப்பு (Critical illness);
* தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal accident);
* ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் (comprehensive health insurance)
இந்த ஐந்து வகையான திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களைச் சேர்த்தோ அல்லது தனித் தனியாகவோ மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறது.
மருத்துவமனை செலவு!
மருத்துவப் பரிசோதனை இல்லை; வயது வரம்பு இல்லை; எந்த மருத்துவமனையிலும் சேரலாம் என்று வரும் விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தது.
இந்த வகையானத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை உதாரணத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு தினத்திற்கும் தருவார்கள். இந்த தொகைக்கும் மருத்துவச் செலவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக, நீங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால், இந்த பாலிசிபடி 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த ஐந்து நாட்களில் நீங்கள் செய்த மருத்துவச் செலவுகள் எதற்கும் கிளைம் செய்ய முடியாது.
ஏற்கெனவே, பிரதான மருத்துவக் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்கள் வேண்டுமானால் இத்தகைய பாலிசியைக் கூடுதலாக எடுக்கலாம். ஆனால், இதற்கான பிரீமியம் அதிகம். பொதுவாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற பாலிசியை அதிகமாக விற்பனை செய்கின்றன.
உங்களுக்கு இந்த பாலிசி தேவைப்பட்டால், பொதுக் காப்பீடு அல்லது தனித்துவ மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முழுமையான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் ரைடர் பாலிசியாக (துணை பாலிசி) இதை சேர்த்துக் கொள்ளலாம்.
பணப் பலன்!
இந்த வகையான திட்டம் முன்வடிவமைக்கப்பட்ட மருத்துவச் செலவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தொகையை அளிக்கும். இதில் 90% வரையறுக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவைச் சார்ந்தது. இந்த வகையான திட்டங்களில் பல நேரங்களில் நீங்கள் உங்கள் கையிலிருந்து தொகையை தர நேரிடும். இதிலும் ஏகப்பட்ட விதிமுறைகள், வருடாந்திர வரன்முறை, அட்டவணையில்லா நோய்கள் என்று ஏக கெடுபிடிகள். இந்த வகையான திட்டங்களை சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக விநியோகிக்கின்றன. கவனித்து பாலிசிகளை தேர்வு செய்யவும்.    
தீவிர நோய் பாதிப்பு!
மிகக் கடினமான நோய்கள் கண்டறியப்பட்ட பின் ஒரு பெருந்தொகையோ அல்லது மாதாந்திர தொகையோ, அல்லது மருத்துவச் செலவை ஏற்கக்கூடிய பாலிசி இது. இத்தகையத் திட்டங்களை எல்லா தரப்பு நிறுவனங்களும் அளிக்கின்றன. புற்றுநோய், மூளை புற்றுநோய், பக்கவாதம், இருதய பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவற்றிற்கு இதன் கீழ் கவரேஜ் கிடைக்கும். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தீவிர நோய் வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் பரம்பரை வியாதிகள் உடையவர்களுக்கும் இந்த திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்து அத்துடன் தீவிர நோய் பாதிப்பு பாலிசியை துணை பாலிசியாக எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.
தனிநபர் விபத்துக் காப்பீடு!
இந்த பாலிசியை வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். செய்யும் தொழில் வகையைப் பொறுத்து பிரீமியம் மாறும். இந்த வகையானத் திட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உடல் சேதங்களுக்கோ, உயிர் இழப்பிற்கோ இழப்பீடு வழங்கப்படும். பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் விபத்துக் காப்பீடு திட்டம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசிகளில் ஓரிரு பயன்பாடு குறைவாக இருக்கும். 10 லட்ச ரூபாய் கவரேஜ் ரைடர் பாலிசிக்கு நிறுவனத்தைப் பொறுத்து 350 ரூபாய் முதல் 700 ரூபாய் பிரீமியம் இருக்கும். பல பொதுக் காப்பீடு நிறுவனங்களின் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிக அத்தியாவசியமான பாலிசி.
ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டம். இத்திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டறியப்பட்ட சில நோய்களைத் தவிர, அனைத்து மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியது. பொதுவாக, உள்நோயாளி பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துச் செலவுகளும் குறிப்பாக அறை வாடகை, ஆய்வகக் கட்டணம், நர்ஸிங் கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் ஏற்கப்படுகிறது. ஒருவரின் மருத்துவமனைச் செலவுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது என்றால், அந்த நோய்க்குரிய மருத்துவமனை உள்நோயாளி செலவினங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும்முன் ஏற்பட்ட செலவுகளும், அதற்குபின் ஏற்படும் செலவுகளும் (Pre & Post Hospitalization) காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
இதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இவை குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது. விலையை வைத்து மட்டும் பாலிசிகளை மதிப்பிட முடியாது. இத்தகையச் சிறந்த திட்டங்களை நியூ இந்தியா, யுனைடெட், பஜாஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் ஸ்டார், மேக்ஸ், புபா, அப்போலோ போன்ற தனித்துவ காப்பீடு நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இத்தகைய திட்டங்கள் இல்லை.
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்கள் கிளைம் சேவைகளை மூன்றாம் நிறுவனத்திடம் (TPA - Third Party Administrator) தந்துவிடுகின்றன. அனைத்து சேவைகளுக்கும் நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் சேவை நிறுவனத்தையே அணுக வேண்டும்.
முடிவாக..!
பொதுவாக எந்த மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மகப்பேறு, பல் சார்ந்த சிகிச்சைகள் (விபத்தினால் ஏற்படுவதைத் தவிர), புறநோயாளி சிகிச்சைகள் மற்றும் ஒரு நாளுக்குள் வரும் உட்பிரிவு சிகிச்சை செலவினங்களுக்கு இழப்பீடு தருவதில்லை. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சில மணி நேரத்திலேயே அனுப்பி விடப்படும் சிகிச்சைகளும் உண்டு. உதாரணமாக, கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றல் போன்ற 130-க்கும் மேற்பட்ட உலக சுகாதார நிறுவனம் பட்டியலில் உள்ள நோய்களுக்கு உட்பிரிவு சிகிச்சை இல்லாமலேயே செலவுகள் காப்பீடு நிறுவனங்களால் ஏற்கப்படுகின்றன.
மேலும், நிறுவனங்கள் அளித்துள்ள மருத்துவமனை சேவைப் பட்டியலை பார்ப்பதும் முக்கியம். ஏனெனில், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் ஆகும் செலவுகளை காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக செலுத்திவிடுகிறது. மற்ற மருத்துவமனைகளில் நீங்கள் முதலில் செலவு செய்துவிட்டு, பிறகு உரிய ஆவணங்களை காப்பீடு நிறுவனத்திடம் உரிய காலத்திற்குள் செலுத்திவிட்டு பணத்தை பெற வேண்டிவரும். அதிலும் சில காப்பீடு நிறுவனங்கள் 10 முதல் 20% தொகையைப் பிடித்தம் செய்கின்றன.
எனவே உஷார்!''
கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டோம்! இனி எது பெஸ்ட் என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!

Saturday, September 15, 2012

சீரான முதலீட்டுத் திட்டம் - பகுதி 1

ந்த முதலீட்டு வகை பற்றியும் உணர்சிகரமான பிடிப்பு தேவையற்றது. பொதுவாகவே முதலீட்டு வகைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத (மெத்தப் படித்தவர்களும் அடக்கம்) ஒரு நாட்டில் சிக்கலான, வெளிப்படைத்தன்மையற்ற, அபாயகரமான ஏற்ற இறக்கங்களுடைய நீண்டகால முதலீடுகள் பற்றிய தெளிவு ஏற்பட அதிக காலம் ஆகலாம். முதலில் அதைக் கற்றுக் கொடுப்பவர்கள் உள்நோக்கம் ஏதுமற்ற நேர்மையோடு இருக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சீரான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றிய தெளிவை கொடுக்கவே இந்தக் கட்டுரை.
மாத வருமானக்காரர்களோ, பெரு முதலீட்டாளர்களோ சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும் விதங்கள் பற்றி நாம் முன்பு பேசியிருக்கிறோம். http://panavivakaram.blogspot.in/2011/09/blog-post_26.html
சீரான முதலீட்டுத் திட்டம் ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும் (Mutual Fund). நேரடியாக பங்குகளை வாங்கி வைத்து நேரம் பார்த்து விற்று லாபமீட்டும் வேலையைச் செய்து அந்தத் தொகுப்பை (Portfolio) நாள்தோறும் நிர்வகிக்கக் கூடிய நேரமும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள், அவ்வாறு செய்யக்கூடிய தகுதி (கல்வியும் அனுபவமும்) உள்ளவர்களிடம் தங்கள் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வது. இப்படிச் சேரும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் நிதியை (Mutual Fund) நிர்வகிப்பவரே பரஸ்பர நிதி நிர்வாகி (Fund Manager). முதலீட்டாளர்களிடம் ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு இதைச் செய்யும் நிறுவனமே சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Management Company). சொத்து என்றாலே மண்ணும் பொன்னும் மட்டுமல்ல.
இப்படி ஒரு நிதியில் சேரும் பணம் நிர்வாகியால் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு நிதியும் ஒவ்வொரு வகையில் நிர்வகிக்கப்படும். நிதியை ஆரம்பிக்கும் போதே (Initial Public Offering - IPO) நிர்வாகி அதன் வகை பற்றி அறிவிப்பார். எடுத்துக்காட்டாக 'டாப் 100' என்ற நிதியில் பணம் முழுதும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 'பாலன்சுடு பண்டில்' 50 சதம் பங்குகளிலும் 50 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இது போல. 
முதலீட்டாளர் தனது ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைக்கு ஏற்ப ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆக சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்றால் என்ன?
பரஸ்பர நிதி முதலீட்டில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் நேரடியான பதிப்பு எப்போதும் உண்டு. நீங்களே வாங்கி நிர்வகிக்கும் பங்குகளின் தொகுப்பு போல அது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்ன அது சற்று தேர்ந்த அனுபவமுள்ள தகுதி படைத்த நிர்வாகியால் செய்யப்படும். ஆனால் மொத்த முதலீடாக இல்லாமல் சிறிது பணத்தை மாதந்தோறும் ஒரு நிதியில் போடுவதே சீமுதி. எடுத்துக்காட்டாக மாதம் ரூ.500 போல. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கியமான பயன், நல்ல பெரும் பங்குகளை (பல நூறு ருபாய் மதிப்புள்ள) வாங்கும் அளவு பணம் இல்லாத போது இப்படிப்பட்ட நிதியில் பணம் போடுவதன் மூலம் அப்பயனை அடைய முடியும். 

சில அனுகூலங்கள்  
  • பங்குச் சந்தையின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்ப ஒரு அலகின் (Unit) விலை ஏறி இறங்கும். சீராகத் தொடர்ந்து முதலீடு செய்கையில் வெவ்வேறு விலையில் ஒரு அலகு வாங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படியில் அது சாதகமான சராசரி விலையை அளிக்கிறது. இதை 'விலைச் சராசரி' (Ruppee Cost Averaging) என்கிறார்கள். விளங்கிக்கொள்ள படத்தைப் பாருங்கள்.Rupee Cost Averaging        மொத்த முதலீடு என்றால் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அலகு இங்கே சராசரி விலை ரூ.9.836 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுப்பெருக்கத்தின் சக்தி. ஏற்கனவே உள்ள முதலீடு பணம் ஈட்டும் போது மேலும் புதிய முதலீடுகள் சேர்ந்து கொண்டே போகையில் பணம் பன்மடங்காகப் பெருகும்.
     Power of Compounding 
அது போக சீரான முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயனே சந்தை காளையா கரடியா என்று நேரம் பார்த்துக் கிடக்கத் தேவையில்லாமல் எல்லாக் காலத்திலும் கவலையில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யத் தோதானது என்பதே.
 
எப்படிச் செய்வது? 
  • எதற்காக (எதிர்காலத் திட்டங்கள்- திருமணம் போன்றவை) முதலீடு செய்கிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்வது.
  • அந்தக் கால அளவிற்கு ஏற்ப தேவைப்படும் மாதத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் கணித்துக் கொள்வது.
  • சரியான நிதி திட்டத்தை அனுபவமுள்ள நிதித் திட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.
  • பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீண்டகாலம் முதலீட்டைச் செய்வது.
  • நிதித் திட்ட ஆலோசகரின் உதவியுடன் திட்டத்தைக் கண்காணிப்பதுடன் தேவைப்பட்டால் மாற்றம் செய்வது.
 

Friday, January 20, 2012

உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning)

அல்லா உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள். அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள். உடையும் வழங்குங்கள்.  அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்.
- திருக்குர்ஆன்

ழைய திரைப்படங்களில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கிழவர் வக்கீலைக் கூப்பிடச் சொல்வார். இனிமேல் தான் நீண்ட காலம் வாழ மாட்டோம் என்று உணர்ந்து தனது சொத்தை உயில் எழுதி வைக்க நினைத்து அப்படிச் சொல்வார். தொலைந்து போன உயிலைக் கண்டுபிடிப்பது போன்று கூட திரைக்கதைகள் உண்டு. அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். பொதுவாகவே நமது சூழலில் இதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வேலை என்ற எண்ணமே இருக்கும். ஆனால், சிறிய சொத்தானாலும் பெரிய சொத்தானாலும் பிரச்சினை ஒன்றுதான்.

உடைமைத் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்களிடம் உள்ள சொத்தை (உடமை) அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்தளிப்பதே உடமைத் திட்டமிடுதல். சொத்து என்றதும் பலவாறாக நினைத்து வீடு, நிலங்கள், தோட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ரொக்கப் பணம், சொத்து, தங்கம், காப்பீட்டுத் திட்ட முதலீடு, சேம நல நிதி, பங்குகள், வைப்பு நிதி, சொத்திலிருந்து வரும் வருமானம் போன்ற அனைத்தும் உடமை (Estate) என்றே கருதப்படும்.
குறிக்கோள் 
  • நீங்கள் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னாலும் சொத்தை நிர்வகிப்பது.
  • உங்கள் சொத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத அபாயங்களிலிருந்து அவற்றைக் காப்பது. 
  • அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு அதைச் சரியானவர்களிடம் கொண்டு செல்வது.
சேவைகள்
  • ஆலோசனை சேவை. உடமைத் திட்டமிடுதல் பற்றிய வரையறைக்குள் திறம்பட சொத்துக்களை நிர்வாகம் செய்வதோடு அடுத்த கட்ட வாரிசுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும் மேற்பார்வை செய்வது.
  • உயில்கள், டிரஸ்ட் ஏற்படுத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது.
  • அசையும் சொத்துக்களான நகைகள், உரிமைப் பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. இந்த சேவைகளை சில வங்கிகளும் அளிக்கின்றன.
டிரஸ்ட் - இது ஒரு நிர்வாக அமைப்பு. ஒருவரின் வாழ்நாளில் சொத்துக்களை நிர்வாகிப்பது. 
உயில் - தனக்குப் பிறகு சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்று ஒருவர் எழுதி வைக்கும் சட்ட ஆவணம்.

தற்போதைய வளர்ந்து வரும் நிதிச் சூழலில் சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் இது போன்ற நிபுணத்துவ சேவைகளை தகுதியான ஆலோசகரிடம் பெறுவது முக்கியம். இல்லாவிட்டால் உழைப்பின் பலனை சரியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடலாம். ஒரு நல்ல நிதித் திட்டமிடுபவரை (CFP - Certified Financial  Planner) பார்க்கலாம். இந்த இணையம் உதவும்.

அபூபக்கர் சித்திக், CFP 

  

Wednesday, December 21, 2011

நிதிப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது!

ன்லைனில் காப்பீடு அல்லது பரஸ்பர நிதி அல்லது வேறு நிதிச் சேவைகளை வாங்குவது ஒரு எளிதான காரியம். இணையத்தில் எப்பொழுதும் உலவிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக எளிது. ஏதேனும் கேள்வி எழுந்தால் உடனே கூகிள் செய்து விடலாம். ராக்கெட்டே செய்யலாம். இந்த வலைப்பதிவில் எழுதப்பட்ட முதல் பதிவே அது பற்றியது தான்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html

நேற்று எகனாமிக் டைம்ஸில் படித்த ஒரு செய்தி இது. ஆன்லைனில் பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்ய விரும்புவோர் ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ந்தால் மட்டுமே ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். மானிடரி ஆதாரிட்டி ஒப் சிங்கபூர் (Monetary Authority of Singapore) நடத்தும் ஆன்லைன் பாடங்களைப் படித்து, பதிலளித்து தேர்ந்தால் மட்டுமே அவர்கள் ஆன்லைனில் பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்வது உலகிலேயே இதுதான் முதல் முறை. தேறாதவர்கள் நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், 2008 வாக்கில் ஆயிரக்கணக்கான சிங்கபூரர்கள், குறைந்த அபாயமுள்ளது (low  risk) என்று நம்பப்பட்ட லெமான் பிரதர்ஸ் (Lehman Brothers) சிறு பத்திரங்களில் (Mini Bonds) முதலீடு செய்து பணத்தை இழந்ததே.


இதில் ஒரு விஷயம் என்னவென்றால், தெரியாமல் பணத்தை போட்டு இழப்பதைத் தவிர்த்தாலும், யாரிடம் நல்ல ஆலோசனையைப் பெறுவது என்பது குறித்த வரையறை செய்வது. இந்தியாவில் இதற்குத் தேவை அதிகம். நிதி ஆலோசகர் யார் என்ற வரையறையோடு தரப் படுத்துதலும் முக்கியம். தற்பொழுது உள்ள ஒரே தேர்வு சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவர்களே (Certified Financial Planners). மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளம் உதவும்.
http://www.fpsbindia.org/

Wednesday, November 23, 2011

காப்பீடு எடுக்கும்போது செய்ய வேண்டியவை

ரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.
 நமது தலைமை நிதித் திட்டமிடுபவர், அபூபக்கர் சித்திக் (CFP), இதைப்பற்றிக் கூறும்போது வாடிக்கையாளர்கள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

  1. காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIG யில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். 
  2. கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைதீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப் படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.
  3. காப்பீடு என்பது வாடிக்கையாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப் படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.
  4. காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.
  5. கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.   

Sunday, October 9, 2011

ஒரு அறிமுகம்

அபு பக்கர் சித்திக் 2008 ல் நிதித் திட்டமிடுதல் சான்றிதழ் (Certified Financial Planner) பெற்றார். அதற்கு முன்பே பண்டகச் சந்தையில் (Commodities Futures Market) நல்ல அனுபவம் உண்டு. பரஸ்பர நிதி (Mutual Fund) மற்றும் காப்பீடு (ஆயுள், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை) விசயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தமிழ்நாடு நிதித் திட்டமிடுபவர் கழகத்திலும் (Tamilnadu Financial Planner's Association - TNFPA http://www.tnfpa.com) முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நண்பர். அவரே எங்களது நிறுவனத்தின் (Accrue - http://www.accruetrade.com/) தலைமை நிதித் திட்டமிடுபவர் (Chief Financial Planner). 
சில மாதங்களுக்கு முன் நாணயம் விகடனில் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்போது (16.10௦.2011 இதழ்), மாதம் ரூ.14500 வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு இவர் தயாரித்த நிதித் திட்டம் நாணயம் விகடனில் வந்திருக்கிறது. பெரிய வருமானம் உள்ளவர்கள் மட்டுமே நிதித் திட்டமிட தகுதியுள்ளவர்கள் என்ற பொதுக் கருத்தை இது உடைக்கிறது. சிறு குடும்பமும் எதிர்காலத்தைத் தெளிவாகத் திட்டமிடலாம் என்பதற்கு நல்ல உதாரணம். பணவிவகாரத்திலும் இவரது கருத்துக்கள் வெளிவரும். கட்டுரையை இங்கே வாசிக்கலாம். http://www.vikatan.com 

இவரது வலைப்பதிவு http://nithivalam.wordpress.com/