Saturday, September 15, 2012

சீரான முதலீட்டுத் திட்டம் - பகுதி 1

ந்த முதலீட்டு வகை பற்றியும் உணர்சிகரமான பிடிப்பு தேவையற்றது. பொதுவாகவே முதலீட்டு வகைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத (மெத்தப் படித்தவர்களும் அடக்கம்) ஒரு நாட்டில் சிக்கலான, வெளிப்படைத்தன்மையற்ற, அபாயகரமான ஏற்ற இறக்கங்களுடைய நீண்டகால முதலீடுகள் பற்றிய தெளிவு ஏற்பட அதிக காலம் ஆகலாம். முதலில் அதைக் கற்றுக் கொடுப்பவர்கள் உள்நோக்கம் ஏதுமற்ற நேர்மையோடு இருக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சீரான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றிய தெளிவை கொடுக்கவே இந்தக் கட்டுரை.
மாத வருமானக்காரர்களோ, பெரு முதலீட்டாளர்களோ சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும் விதங்கள் பற்றி நாம் முன்பு பேசியிருக்கிறோம். http://panavivakaram.blogspot.in/2011/09/blog-post_26.html
சீரான முதலீட்டுத் திட்டம் ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும் (Mutual Fund). நேரடியாக பங்குகளை வாங்கி வைத்து நேரம் பார்த்து விற்று லாபமீட்டும் வேலையைச் செய்து அந்தத் தொகுப்பை (Portfolio) நாள்தோறும் நிர்வகிக்கக் கூடிய நேரமும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள், அவ்வாறு செய்யக்கூடிய தகுதி (கல்வியும் அனுபவமும்) உள்ளவர்களிடம் தங்கள் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வது. இப்படிச் சேரும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் நிதியை (Mutual Fund) நிர்வகிப்பவரே பரஸ்பர நிதி நிர்வாகி (Fund Manager). முதலீட்டாளர்களிடம் ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு இதைச் செய்யும் நிறுவனமே சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Management Company). சொத்து என்றாலே மண்ணும் பொன்னும் மட்டுமல்ல.
இப்படி ஒரு நிதியில் சேரும் பணம் நிர்வாகியால் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு நிதியும் ஒவ்வொரு வகையில் நிர்வகிக்கப்படும். நிதியை ஆரம்பிக்கும் போதே (Initial Public Offering - IPO) நிர்வாகி அதன் வகை பற்றி அறிவிப்பார். எடுத்துக்காட்டாக 'டாப் 100' என்ற நிதியில் பணம் முழுதும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 'பாலன்சுடு பண்டில்' 50 சதம் பங்குகளிலும் 50 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இது போல. 
முதலீட்டாளர் தனது ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைக்கு ஏற்ப ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆக சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்றால் என்ன?
பரஸ்பர நிதி முதலீட்டில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் நேரடியான பதிப்பு எப்போதும் உண்டு. நீங்களே வாங்கி நிர்வகிக்கும் பங்குகளின் தொகுப்பு போல அது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்ன அது சற்று தேர்ந்த அனுபவமுள்ள தகுதி படைத்த நிர்வாகியால் செய்யப்படும். ஆனால் மொத்த முதலீடாக இல்லாமல் சிறிது பணத்தை மாதந்தோறும் ஒரு நிதியில் போடுவதே சீமுதி. எடுத்துக்காட்டாக மாதம் ரூ.500 போல. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கியமான பயன், நல்ல பெரும் பங்குகளை (பல நூறு ருபாய் மதிப்புள்ள) வாங்கும் அளவு பணம் இல்லாத போது இப்படிப்பட்ட நிதியில் பணம் போடுவதன் மூலம் அப்பயனை அடைய முடியும். 

சில அனுகூலங்கள்  
  • பங்குச் சந்தையின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்ப ஒரு அலகின் (Unit) விலை ஏறி இறங்கும். சீராகத் தொடர்ந்து முதலீடு செய்கையில் வெவ்வேறு விலையில் ஒரு அலகு வாங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படியில் அது சாதகமான சராசரி விலையை அளிக்கிறது. இதை 'விலைச் சராசரி' (Ruppee Cost Averaging) என்கிறார்கள். விளங்கிக்கொள்ள படத்தைப் பாருங்கள்.Rupee Cost Averaging        மொத்த முதலீடு என்றால் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அலகு இங்கே சராசரி விலை ரூ.9.836 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுப்பெருக்கத்தின் சக்தி. ஏற்கனவே உள்ள முதலீடு பணம் ஈட்டும் போது மேலும் புதிய முதலீடுகள் சேர்ந்து கொண்டே போகையில் பணம் பன்மடங்காகப் பெருகும்.
     Power of Compounding 
அது போக சீரான முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயனே சந்தை காளையா கரடியா என்று நேரம் பார்த்துக் கிடக்கத் தேவையில்லாமல் எல்லாக் காலத்திலும் கவலையில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யத் தோதானது என்பதே.
 
எப்படிச் செய்வது? 
  • எதற்காக (எதிர்காலத் திட்டங்கள்- திருமணம் போன்றவை) முதலீடு செய்கிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்வது.
  • அந்தக் கால அளவிற்கு ஏற்ப தேவைப்படும் மாதத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் கணித்துக் கொள்வது.
  • சரியான நிதி திட்டத்தை அனுபவமுள்ள நிதித் திட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.
  • பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீண்டகாலம் முதலீட்டைச் செய்வது.
  • நிதித் திட்ட ஆலோசகரின் உதவியுடன் திட்டத்தைக் கண்காணிப்பதுடன் தேவைப்பட்டால் மாற்றம் செய்வது.
 

Friday, January 20, 2012

உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning)

அல்லா உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள். அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள். உடையும் வழங்குங்கள்.  அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்.
- திருக்குர்ஆன்

ழைய திரைப்படங்களில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கிழவர் வக்கீலைக் கூப்பிடச் சொல்வார். இனிமேல் தான் நீண்ட காலம் வாழ மாட்டோம் என்று உணர்ந்து தனது சொத்தை உயில் எழுதி வைக்க நினைத்து அப்படிச் சொல்வார். தொலைந்து போன உயிலைக் கண்டுபிடிப்பது போன்று கூட திரைக்கதைகள் உண்டு. அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். பொதுவாகவே நமது சூழலில் இதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வேலை என்ற எண்ணமே இருக்கும். ஆனால், சிறிய சொத்தானாலும் பெரிய சொத்தானாலும் பிரச்சினை ஒன்றுதான்.

உடைமைத் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்களிடம் உள்ள சொத்தை (உடமை) அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்தளிப்பதே உடமைத் திட்டமிடுதல். சொத்து என்றதும் பலவாறாக நினைத்து வீடு, நிலங்கள், தோட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ரொக்கப் பணம், சொத்து, தங்கம், காப்பீட்டுத் திட்ட முதலீடு, சேம நல நிதி, பங்குகள், வைப்பு நிதி, சொத்திலிருந்து வரும் வருமானம் போன்ற அனைத்தும் உடமை (Estate) என்றே கருதப்படும்.
குறிக்கோள் 
  • நீங்கள் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னாலும் சொத்தை நிர்வகிப்பது.
  • உங்கள் சொத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத அபாயங்களிலிருந்து அவற்றைக் காப்பது. 
  • அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு அதைச் சரியானவர்களிடம் கொண்டு செல்வது.
சேவைகள்
  • ஆலோசனை சேவை. உடமைத் திட்டமிடுதல் பற்றிய வரையறைக்குள் திறம்பட சொத்துக்களை நிர்வாகம் செய்வதோடு அடுத்த கட்ட வாரிசுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும் மேற்பார்வை செய்வது.
  • உயில்கள், டிரஸ்ட் ஏற்படுத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது.
  • அசையும் சொத்துக்களான நகைகள், உரிமைப் பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. இந்த சேவைகளை சில வங்கிகளும் அளிக்கின்றன.
டிரஸ்ட் - இது ஒரு நிர்வாக அமைப்பு. ஒருவரின் வாழ்நாளில் சொத்துக்களை நிர்வாகிப்பது. 
உயில் - தனக்குப் பிறகு சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்று ஒருவர் எழுதி வைக்கும் சட்ட ஆவணம்.

தற்போதைய வளர்ந்து வரும் நிதிச் சூழலில் சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் இது போன்ற நிபுணத்துவ சேவைகளை தகுதியான ஆலோசகரிடம் பெறுவது முக்கியம். இல்லாவிட்டால் உழைப்பின் பலனை சரியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடலாம். ஒரு நல்ல நிதித் திட்டமிடுபவரை (CFP - Certified Financial  Planner) பார்க்கலாம். இந்த இணையம் உதவும்.

அபூபக்கர் சித்திக், CFP 

  

Wednesday, December 21, 2011

நிதிப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது!

ன்லைனில் காப்பீடு அல்லது பரஸ்பர நிதி அல்லது வேறு நிதிச் சேவைகளை வாங்குவது ஒரு எளிதான காரியம். இணையத்தில் எப்பொழுதும் உலவிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக எளிது. ஏதேனும் கேள்வி எழுந்தால் உடனே கூகிள் செய்து விடலாம். ராக்கெட்டே செய்யலாம். இந்த வலைப்பதிவில் எழுதப்பட்ட முதல் பதிவே அது பற்றியது தான்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html

நேற்று எகனாமிக் டைம்ஸில் படித்த ஒரு செய்தி இது. ஆன்லைனில் பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்ய விரும்புவோர் ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ந்தால் மட்டுமே ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். மானிடரி ஆதாரிட்டி ஒப் சிங்கபூர் (Monetary Authority of Singapore) நடத்தும் ஆன்லைன் பாடங்களைப் படித்து, பதிலளித்து தேர்ந்தால் மட்டுமே அவர்கள் ஆன்லைனில் பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்வது உலகிலேயே இதுதான் முதல் முறை. தேறாதவர்கள் நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், 2008 வாக்கில் ஆயிரக்கணக்கான சிங்கபூரர்கள், குறைந்த அபாயமுள்ளது (low  risk) என்று நம்பப்பட்ட லெமான் பிரதர்ஸ் (Lehman Brothers) சிறு பத்திரங்களில் (Mini Bonds) முதலீடு செய்து பணத்தை இழந்ததே.


இதில் ஒரு விஷயம் என்னவென்றால், தெரியாமல் பணத்தை போட்டு இழப்பதைத் தவிர்த்தாலும், யாரிடம் நல்ல ஆலோசனையைப் பெறுவது என்பது குறித்த வரையறை செய்வது. இந்தியாவில் இதற்குத் தேவை அதிகம். நிதி ஆலோசகர் யார் என்ற வரையறையோடு தரப் படுத்துதலும் முக்கியம். தற்பொழுது உள்ள ஒரே தேர்வு சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவர்களே (Certified Financial Planners). மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளம் உதவும்.
http://www.fpsbindia.org/

Wednesday, November 23, 2011

காப்பீடு எடுக்கும்போது செய்ய வேண்டியவை

ரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.
 நமது தலைமை நிதித் திட்டமிடுபவர், அபூபக்கர் சித்திக் (CFP), இதைப்பற்றிக் கூறும்போது வாடிக்கையாளர்கள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

  1. காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIG யில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். 
  2. கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைதீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப் படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.
  3. காப்பீடு என்பது வாடிக்கையாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப் படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.
  4. காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.
  5. கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.   

Sunday, October 9, 2011

ஒரு அறிமுகம்

அபு பக்கர் சித்திக் 2008 ல் நிதித் திட்டமிடுதல் சான்றிதழ் (Certified Financial Planner) பெற்றார். அதற்கு முன்பே பண்டகச் சந்தையில் (Commodities Futures Market) நல்ல அனுபவம் உண்டு. பரஸ்பர நிதி (Mutual Fund) மற்றும் காப்பீடு (ஆயுள், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை) விசயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தமிழ்நாடு நிதித் திட்டமிடுபவர் கழகத்திலும் (Tamilnadu Financial Planner's Association - TNFPA http://www.tnfpa.com) முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நண்பர். அவரே எங்களது நிறுவனத்தின் (Accrue - http://www.accruetrade.com/) தலைமை நிதித் திட்டமிடுபவர் (Chief Financial Planner). 
சில மாதங்களுக்கு முன் நாணயம் விகடனில் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்போது (16.10௦.2011 இதழ்), மாதம் ரூ.14500 வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு இவர் தயாரித்த நிதித் திட்டம் நாணயம் விகடனில் வந்திருக்கிறது. பெரிய வருமானம் உள்ளவர்கள் மட்டுமே நிதித் திட்டமிட தகுதியுள்ளவர்கள் என்ற பொதுக் கருத்தை இது உடைக்கிறது. சிறு குடும்பமும் எதிர்காலத்தைத் தெளிவாகத் திட்டமிடலாம் என்பதற்கு நல்ல உதாரணம். பணவிவகாரத்திலும் இவரது கருத்துக்கள் வெளிவரும். கட்டுரையை இங்கே வாசிக்கலாம். http://www.vikatan.com 

இவரது வலைப்பதிவு http://nithivalam.wordpress.com/

Monday, September 26, 2011

முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டந்த வாரத்தில் உலகளவில் பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சி கண்டது. 2008 க்கு பின்னான பெரிய ஒரு வாரத்திய சரிவு. தங்கம் போன்ற பண்டங்களும் சரிந்துள்ளன. சமீபத் தகவல்படி தங்கம் இந்திய சந்தையில் பத்து கிராமுக்கு ரூ.700 அளவும் வெள்ளி கிலோவுக்கு ரூ.5000 அளவிலும் சரிந்துள்ளன. சில மாதங்களாகவே தங்கம் வாங்க பல முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கமே தீர்ந்து விடப் போவது போல. இப்போது வாங்க வில்லையென்றால் எதிர்காலத்தில் வாங்கவே முடியாதது போன்ற பதற்றம் பலரிடமும் காணப் பட்டது. பத்திருபது வருடங்களுக்கு மேலாக சந்தையில் முதலீடு செய்து வரும் எந்த ஒரு நீண்ட கால முதலீட்டாளரும் இதை ஒரு புன்னகையுடன் கடந்து விடுவார்கள். அவர்கள் இதைப் போன்ற காரண காரியமற்ற வாங்குதலைத் தாண்டியே வந்திருப்பார்கள். இது போன்ற நிலையற்ற சந்தையிலிருந்து விலகி நின்று கவனிக்கும் பக்குவத்தை அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கும்.

ங்களது நிறுவனத்தின் அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளரை வகைப் படுத்தினால் இப்படி வரும்.
1 . மாத வருமானக்காரர்கள் 
2 . பணக்காரர்கள் (High Networth Individuals)
3 . தொழில் முனைவோர் 
இவர்கள் பொதுவாக முதலீட்டை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1 . மாத வருமானக்காரர்கள் 
இவர்கள் தங்கள் வளத்தைச் சிறுகச் சிறுகக் கட்டுபவர்கள். நீண்டகாலக் குறிக்கோள் அடிப்படை கொண்டவர்கள். வருமானத்தின் ஒவ்வொரு பைசாவுக்கும் திட்டம் போடக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள். மூவரில் அபாயம் (Risk) குறைவானவர்கள். அறிவையும் உடல் உழைப்பையுமே கருவியாகக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியவர்கள். இவர்கள் இது போன்ற சந்தையைப் பார்த்துப் பதற்றப் படத் தேவையில்லை. அதே நேரம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். இவர்களின் வருமானத்தில் ஒரு பகுதி ஏற்கனவே சேம நல நிதிக்குப் (Provident  Fund) போய்கொண்டிருக்கும். கையில் வரும் பணம் முழுவதும் இவர்களது திட்டத்திற்குள் தான். செலவு போக (ஆயுள் மற்றும் பிற காப்பீடுகளின் செலவுகளையும் சேர்த்து) மீதமுள்ளவற்றை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்பதே கேள்வி. இளம் வயதுக்காரர்கள் (25 -40 வயது) சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) பணம் போடலாம். இது மறைமுகமாக சந்தையில் செய்யப்படும் முதலீடு. அதே நேரம் சந்தையின் எல்லா நிலையிலும் (உயர்வு/சரிவு) தொடர்ச்சியாக முதலீடு செய்வதால் அதிக அபாயமில்லாதது. சிறுகச் சிறுகச் சேர்த்து, சேர்ந்த பணத்தை மொத்தமாக பங்குச் சந்தையிலோ தங்கம், வெள்ளி போன்றவற்றிலோ போடுவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஒருவர் கடந்த இரு வருடங்களாக மாதம் ரூ.5000 சேமித்து, சேர்ந்த ரூ.1,20,000 யில் இப்போது தங்கம் ௦௦வாங்குவதை விட, அந்தந்த மாதத்திலேயே அந்தப் பணத்திற்குத் தங்கம் வாங்கியிருந்தால் அதிக பயன் அடைந்திருக்க முடியும். இல்லாவிட்டாலும் முதலீட்டின் மதிப்புக் குறைவையாவது தவிர்க்கலாம். சீரான முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையே இதுதான். சீரான முதலீட்டுத் திட்டம் பற்றித் தனியாகப் பார்க்கலாம். என்ன மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது என்பதை இவர்கள் ஒரு நிதித் திட்டமிடுபவரிடம் (Financial  Planner) ஆலோசனை செய்யலாம். அவர் தனிநபரின் நிதி நிலைக்கேற்ற திட்டங்களை பரிந்துரைப்பார்.

2 . பணக்காரர்கள் (உயர் நிகரமதிப்பு நபர்கள் - High Networth Individuals)
நிதி அடிப்படையில் இவர்களை இப்படி வரையறுக்கலாம். நிகர சொத்து மதிப்பு (வாழும் வீட்டைத் தவிர்த்த மதிப்பு) ஒரு மில்லியன் டாலரும் (தோராயமாக ரூ. 5 கோடி) அதற்கு மேலும் உள்ளவர்கள். ஏற்கனவே இருக்கும் சொத்துக்களிலிருந்து வரும் சம்பாத்தியத்தை வைத்து புதிய முதலீடுகளைச் செய்து மேலும் சொத்துக்களை சேர்ப்பவர்கள். இவர்கள் கொஞ்சம் பணத்தை கையிருப்பாக எப்போதும் வைத்திருப்பார்கள்.வாய்ப்பு வரும் போது முதலீடு செய்யத் தயாராக. அப்படி வைத்திருக்கும் பணத்திற்கு (Liquid Cash) பெரிதாக வரும்படி (Returns) ஏதும் இருக்காது. வங்கியில் குறைந்த வட்டி சேமிப்புக் கணக்கிலேயே பெரும்பாலும் கிடக்கும். அல்லது இரும்புப் பெட்டியில். அதனால் அதை சீக்கிரம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய சொத்தில் முதலீடு செய்யப் பார்ப்பார்கள். அது தங்கம் போன்ற பண்டத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ அல்லது நிலத்திலோ (Real Estate) அல்லது ஒரு தொழிலிலோ செய்யப்படும். இதில் பண்டங்களில் முதலீடு செய்வது இரு வகையில் நடக்கலாம். முதலாவது, நேரடியாக தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வது. இரண்டாவது, பண்டகச் சந்தையில் (Commodity Futures Market) முன் தொகையைக் (Margin) கட்டி வர்த்தகம் செய்வது. இதில் சிறிது பணம் இருந்தாலே போதும். ஆனால் அபாயம் இரண்டிலுமே ஒன்றுதான். இழப்பு கிட்டத்தட்ட ஒரே அளவுதான் இருக்கும். இங்கே முதலீட்டாளர் தெரிந்தே அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது. இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பண வலிமை இருப்பதாலேயே இதைச் செய்கிறார். இதுவே மற்ற இரு வகை முதலீட்டாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துகிறது. பங்குச் சந்தையில் இவர்கள் மூன்று வழிகளில் முதலீடு செய்கிறார்கள். தங்களது கணக்கில் (Demat Account) தாங்களே நேரடியாகப் பங்குகளை வாங்கிப் போடுவது. இதற்கு நேரமும் பங்குகள் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. இரண்டாவது , பங்குத் தொகுப்பு மேலாளர் (Portfolio Manager) ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது. அதாவது, இவர் சார்பாக இவருடைய கணக்கில் பங்குகளை வாங்கி விற்கும் அதிகாரத்தை நன்கு விஷயம் தெரிந்தவரிடம் கொடுப்பது. பங்குத்தரகு நிறுவனங்கள் இந்த சேவையைத் தருகின்றன. மூன்றாவது, பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்வது. இதில் குறைந்த அபாயம் உள்ள திட்டங்களிலிருந்து (Debt Funds - கடன் பத்திர முதலீடுகள்), அது அதிகமுள்ள திட்டங்கள் (Equity Funds - பங்கு முதலீடுகள்) வரை தேர்வுகள் உள்ளன.

3 . தொழில் முனைவோர் (Entrepreneur)
இவர்கள் ஒரு வகையில் மாத வருமானக்காரர்கள் போலத்தான். இவர்களுடைய நேரடியான அறிவார்ந்த உழைப்பினாலேயே இவர்கள் தங்கள் தொழிலையும் பணத்தையும் வளர்க்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள். அதே நேரம் மற்ற இருவரையும் விட அதிக நிதி அபாய (Financial Risk) நிலையில் இருப்பவர்கள். எப்பொழுதும் தொழில் முதலீடு தேவைப்படும் நிலையில் இருப்பதனால் எதிர்காலத்துக்காக முதலீடு செய்வதை தள்ளிப்போடக் கூடாது. ஏனென்றால் தங்களுடைய எதிர்காலத்துக்கு தேவையானவற்றைச் செய்யும் பொறுப்பு முழுதும் அவர்களையே சார்ந்தது. அதே நேரம் அதிக லாப நோக்கில், குறுகிய காலத்தில் சம்பாதிக்க இவர்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முனையக் கூடாது. அதில் லாப நட்டத்துக்கு உத்தரவாதம் கிடையாது. நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே அவர்கள் அதில் ஈடுபடவேண்டும். அதுவே அவர்கள் தொழிலுக்கும் நல்லது. தங்களது சராசரி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் சீரான முதலீடு செய்வது சிறந்தது. பங்குச் சந்தையிலோ பண்டகச் சந்தையிலோ நேரடியான கவனத்தை செலுத்துவது குறைவாக இருக்க வேண்டும். அதாவது பண ரீதியாகவும் கால ரீதியாகவும்  அவர்களது தொழிலைப் பாதிக்காத வகையில்.

இப்போது என்ன செய்யலாம்?
தங்கத்தைப் பற்றி விரிவாக, என்ன செய்யலாம் என்று ஏற்கனவே எழுதி விட்டோம். அதை இங்கே பார்க்கலாம்.
தங்கம் இப்போது வாங்கலாமா?
ங்குச் சந்தையைப் பொறுத்தவரை இப்போதுள்ள பிரச்சினை உலகளாவியது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மிகவும் பிரச்சினையில் இருக்கின்றன. அமெரிக்காவின் (US) கடன் திரும்ப செலுத்தும் தகுதியை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (S&P) AAA (அதி உச்ச நம்பகத்தன்மை) விலிருந்து AA +  என்று குறைத்தது தெரிந்திருக்கும்.
"தன்னுடைய எந்தக் கடனையும் அமெரிக்கவால் அடைக்க முடியும். ஏனென்றால் அதைச் செய்யத் தேவையான பணத்தை எப்போதும் எங்களால் அச்சடிக்க முடியும். அதனால் தவறுவதற்கான வாய்ப்பு பூஜ்ய அளவே. S & P விஷயம் செய்ததாக நான் நினைப்பது என்னவென்றால், ஏதோவொரு அடிப்படையான தவறு இருக்கிறதென்ற தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அமெரிக்காவின் ஆன்மாவான சுயமரியாதையில் அடித்ததே." 
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் சொன்ன வாக்கியங்கள் மூலமே பிரச்சினை அடிப்படையானது என்று தெரியும். அங்கே வேலையின்மை பெரும் பிரச்சினை. 
ஐரோப்பாவில் கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் வரிசையாக மூழ்கிக் (Insolvency) கொண்டிருக்கின்றன. பலரும் ஐரோப்பிய யூனியனின் சரிவு உலகப் பொருளாதாரத்தை பலமாகப் பாதிக்கும் என்றே கூறுகிறார்கள். இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக விரிவாகப் பேச வேண்டியவை.
இதில் இந்தியாவின் சந்தை என்னவாகும்? ஏற்கனவே உயரத்திலிருக்கும் பணவீக்கம், அதனால் அதிகரிக்கப்படும் வங்கி கடன் வட்டி விகிதம் போன்றவை சேமிப்பையும் முதலீட்டையும் பாதிக்கும். நுகர்வைக் குறைக்கும். அதனால் தொழில் வேகம் குறையும். அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் விலை உயர்வால் வாகனங்களின் விற்பனை குறைந்து விட்டது. வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு வீடு வாங்குவோரைப் பாதிக்கிறது. அதற்கும் மேலாக வளர்ச்சி வேகம் குறைகிறது என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஆக எல்லாம் குறைந்து, பண்டங்களின் விலை வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் குறையும் போது வட்டி விகிதம் குறைக்கப்படும். இது ஒரு சக்கரம். இறுதியாக, அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் ஒரு வீழ்ச்சி (Recession) க்குள் செல்லாமல் இருந்தால் (40 ௦% நிகழும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்), ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் (முக்கியமாக கிரீஸ் மற்றும் இத்தாலி முழுகுவதைத் தடுப்பது) தனது பிரச்சினையிலிருந்து நல்லபடியாக மீண்டால், ஆசியச் சந்தை மேலே வரும் வாய்ப்புள்ளது. 

க, இப்போதைக்குச் சந்தையில் புதிய முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கலாம்.
ஏற்கனவே உள்ள முதலீடுகளைச் சரி பார்க்கலாம். சற்று பாதுகாப்பான முறையில் அவற்றைத் திருத்தி அமைக்கலாம்.
மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து பொருளாதாரம் மீளும் போது, தொகுப்பை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்.    

Friday, September 23, 2011

நிதித் திட்டமிடுதல் ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?

மேற்கண்ட தலைப்பில் வந்த ஒரு எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) கட்டுரை வாடிக்கையாளர்களுடனான எங்களது அனுபவங்களைப் பெரிதும் ஒத்திருந்தது. அதில் குறிப்பிட்ட காரணங்கள் பற்றிய எங்களது கருத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு.

  • பொதுவாக முதல் சந்திப்பில் நிதித் திட்டமிடல் பற்றிப் பேசும் பொது மிக ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் தேவை என்பதிலும், சீக்கிரம் திட்டமிட ஆரம்பிப்பதில் உள்ள நன்மையையும் நன்கு உணர்கிறார்கள். அடுத்த கட்ட நகர்வு தான் பலருக்கும் பிரச்சினை. அதாவது செயல் படுத்துவதில் தான் சுணக்கமே. இது பெரும்பாலும் திட்டமிடுபவர் (Financial Planner) தேவைப்படும் தகவல்களைக் கேட்கும் போதே ஆரம்பிக்கிறது. பல இளைஞர்களுக்கு (25 - 35 வயதுக்காரர்கள்) பல தகவல்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பலருக்கு தங்கள் வங்கி கிளை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. மாத வருமானக்காரர்களுக்கே இது பொருந்தும். இவர்களுக்கு தங்களுடைய நிதித் தகவல்களை எடுத்துக் கொடுப்பது பெரிய காரியமாக இருக்கிறது. இந்த மனப்பாங்குக்குக் காரணமாக நான் நினைப்பது, அவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான தயக்கமே. தங்களுடைய உண்மையான நிதி நிலையை (அவர்கள் நல்ல நிதி நிலையில் இருந்தாலுமே) தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு பதற்றம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதைத் தள்ளிப் போடவே தகவல்களை அளிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். தாமதத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலும் பணிச்சுமையே. முதலீடுகள், காப்பீடுகள், வருமானம் பற்றிய தகவல், கடன் விவரங்கள் போன்றவற்றை தோண்டியெடுப்பது தேர்வெழுதும் உணர்வை கொடுக்கிறது போல. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வசதியும் நெருக்கடியற்ற நிலையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 
  • இளம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வை இப்போதே அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது. அதுவும் கடன் வாங்கி. சொத்துக்களை கட்டமைக்க வாங்குவதைக் காட்டிலும் பொருட்களை நுகர்வதற்கே (ஹோம் தியேட்டர், செல் போன்கள், கார்) அதிகம் கடன் வாங்கப் படுகிறது. நிதித் திட்டமிடல் தங்களுடைய வாழ்க்கைமுறை நுகர்வை (Lifestyle consumption) பாதிக்ககூடும் என்பதால் அதைத் தள்ளிப்போடவே விரும்புவார்கள். 'எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருக்கிறது', என்ற மனப்பாங்கே இதற்குக் காரணம். 
  • நிறைய வாசிப்பதினால் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு. நிறையப் படிப்பது தவறில்லை. உண்மையில் அவ்வாசிப்பு விழிப்புணர்வை கூட்டி நிபுணர்களின் வழிகாட்டுதல் பற்றிய மதிப்பீட்டை  ஏற்படுத்த வேண்டும். மாறாக, தாங்களாகவே இதைச் செய்து கொள்ள முடியும் என்ற அபிரிமிதமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையில் அப்படிச் சுயமாகத் திட்டமிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.    ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆழ்ந்த கல்விப் பின்புலமும் நீண்ட அனுபவமும் உடைய நிபுணர்களின் வழிகாட்டுதல் எப்போதும் பலமே. இதைச் சட்டை செய்யாதவர்கள் தங்களின் வாசிப்பின் வழியாக, தங்களைக் குறி வைத்து சந்தைப்படுத்தப் படும் பல நிதிப் பண்டங்களை (காப்பீடுகள், பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கி பின் குழப்பத்துக்கு ஆளாவதைக் காணலாம். எனக்குத் தெரிந்த, நன்கு வருமானம் ஈட்டுகிற, நிறைய முதலீடுகள் செய்துள்ள, ஒரு இளம் தொழிலதிபர் நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார். இவர் நிதி சார்ந்த பல பத்திரிக்கைகளை வாசிப்பவர்.
  • நிதி சார் குறிக்கோள் இல்லாமலிருப்பது. பெரும்பாலான இளம் பெற்றோர் தங்களது குழந்தைகள் மீதான கனவோடு அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு பத்து வருடங்கள் கழித்து அவர்களின் உயர் படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்றால் தெரியாது. தோராயமாக் கூட கணக்கிட மாட்டார்கள். அதைப் போலவே தங்களின் ஓய்வு கால நிதி பற்றியும் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்.இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் ஓய்வு பெரும் நிலையில் இருப்பவர்களும் கூட கவனம் இல்லாமல் இருப்பது இங்கே சாதாரணம். இது ஒரு நிதி சார்ந்த இலக்கு என்ற தெளிவு இல்லாததுதான் காரணம்.
  • கட்டணம் இன்னொரு காரணம். நிதித் திட்டமிடுதல் போன்ற விசயங்களுக்கு பெரிய முன் வரலாறு இங்கே இல்லை. ஆலோசனைக்கு கட்டணம் செலுத்துவது மருத்துவம் தவிர பிற துறைகளில் இன்னும் பிரபலமாகவில்லை. இதற்குப் போயா இவ்வளவு? அப்படியென்ன வேலையிருக்கிறது இதில்? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உண்மையில் ஒரு நிதித் திட்டத்தைத் தயாரிப்பதில் திட்டமிடுபவர் தனது பணி நேரத்தில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். நிதிக் கருவிகளைக் (Financial  Tools) கொண்டு, தனது கல்வி, அனுபவம் மற்றும் பொருளறிவு (Product Knowledge) ஆகியவற்றோடு ஒரு தனி நபரின் பிரத்யேகமான சூழலையும் கணக்கில் கொண்டே திட்டத்தை வரைகிறார். இதை ஒரு சூத்திரத்தில் அடக்க முடியாது. ஒவ்வொரு திட்டமும் தனித்தன்மை வாய்ந்தது. 
னால் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. கொஞ்சகொஞ்சமாக படித்தவர்களிடையே நிதித் திட்டமிடுதல் பற்றிய சிந்தனை கூடிவருகிறது. நிதிவிவகாரம் பற்றிய பத்திரிக்கைகளும் பெருகி வருகின்றன. தொழில் விவகாரங்களை அலசும் நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தனி நபர் நிதி (Personal Finance) பற்றிய பதிவுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதோடு தனி நபர் நிதி பற்றி மட்டுமே பேசும் இதழ்கள் வெளி வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மாறிவரும் சூழல் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.